பார்படாஸ் நகரில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய நிலையில் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றதுடன் இரண்டாவது போட்டி சமனிலையில் நிறைவடைந்திருந்தது.
இந்தநிலையில் கடந்த 23ம் திகதி ஆரம்பமான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து முதலாவது இன்னிங்சில் 69.3 ஓவர்களில் 204 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை 154 ஓட்டங்களை பெற்றது. இதன்மூலம் 50 ஓட்டங்கள் முன்னிலையுடன் அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் 93 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதையடுத்து 144 ஓட்டங்கள் எடுத்தால் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 40.2 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டஙகளைப் பெற்று நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜேசன் ஹோல்டர் ஆட்டநாயகன் விரு தும், ஷேன் டவ்ரிச் தொடர்நாயகன் விருதும் வென்றனர்