ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் மேற்கொண்ட சோதனையின்போது, ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிமிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் அமர்நாத் யாத்திரை ஆரம்பமாகியுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாரமுல்லா மாவட்டத்திர் காவல்துறையினர், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒரு வாகனத்தில் வந்த 4 பேரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து வெடிகுண்டு லோஞ்சர்கள் மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் இந்த விசாரணையின் முடிவில், மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.