இந்திய வர்த்தகர் ஒருவரிடம் இரண்டு கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் தலைமை அதிகாரி கலாநிதி குசும்தாச மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோரை வழக்கு விசாரணைகள் முடியும் வரை விளக்கமறியலில் வைக்க தீர்மானித்துள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் தங்க திஸாநாயக்க நேற்று அறிவித்துள்ளார்.
சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு அவர்களின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், இரண்டு பேரையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர்கள் இலஞ்சமாக பெற்றுக்கொண்டதாக கூறப்படும் பணம் சிறிய தொகை இல்லை என்பதால், தான் இந்த தீர்மானத்தை எடுத்த நீதவான், இரண்டு சந்தேக நபர்களின் குரல் மாதிரிகளை பெற்றுக்கொள்ள எதிர்வரும் 29 ஆம் திகதி அரச இரசாயன பரிசோதனை திணைக்களத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் முறைப்பாட்டாளரிடம் இலஞ்சம் கோரி தொடர்புக்கொண்ட தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளதால், விசாரணைகளுக்காக சந்தேக நபர்களின் குரல் மாதிரிகள் தேவையென இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் அதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.