அமெரிக்காவில் அகதிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளை 30 நாட்களில் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களை கட்டு;படுத்தும் நோக்குடன் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் நடைமுறை ஒன்றினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
இந்தப் புதிய சட்டம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் திகதியிலிருந்து மே மாதம் ஆரம்ப காலப்பகுதிவரை அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகள் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களின் சுமார் 2,300 குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பிரித்து காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு கண்டனங்கள் எழுப்பப்பட்டதனைத் தொடர்ந்து, குழந்தைகளை அகதிகளிடம் இருந்து பிரிக்கும் உத்தரவை டிரம்ப் ரத்து செய்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கு அகதியாக வந்த பெண்ணிடமிருந்து 6 வயது குழந்தை பிரிக்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டமை தொடர்பாக பாதிக்கப்பட்ட தாய் சார்பாக அமெரிக்கன் மக்கள் உரிமை ஒன்றியம் சான் டியேகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்றையதினம் வழங்கிய தீர்ப்பில் அகதிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை 14 நாட்களிலும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை 30 நாட்களிலும் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்