20ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவைக்குள் உள்ளீர்க்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 4800 பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகளை அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளும் பொருட்டு அண்மையில் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில் 25 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றுக் கொண்டவர்களையே, முதல் கட்டமாக இணைத்துக் கொள்ளப்படுவதற்கு அமைச்சரவை தீர்மானம் செய்துள்ளது.
இதேவேளை ஏனைய 15ஆயிரத்து 200 பட்டதாரிகளுக்கான நியமனம் குறித்து இதன்போது எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் அவர்களை செப்டம்பர் மாதம் உள்ளீர்ப்பதாக முந்தைய அமைச்சரவை தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முதற்கட்டமாக 5ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் 4800 பட்டதாரிகளே நியமனம் செய்யப்பவுள்ளனர். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பட்டியல் தயாரிக்கப்பட்டதாக ஜனாதிபதிக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து நியமனம் நிறுத்தி வைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் அமைச்சரவை அமர்வின்போது 4800 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க ஜனாதிபதி அனுமதித்தார். மட்டுப்படுத்தப்பட்ட முறையில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் பட்டதாரிகள் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் தமது நியமனம் தொடர்பில் பெயர்களை பதிவு செய்திருந்தாக கூறப்படுகிறது. எனினும் அவர்களில் 200பேரே நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.