குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் ஜிம்ரோன் நகர் கிராமத்திற்கான உள்ளக வீதியில் நேற்று (27) புதன் கிழமை இரவு 8 மணியளவில் பதுங்கி நின்ற மன்னார் காவல் நிலைய வீதி போக்கு வரத்து பிரிவு காவல்துறையினர் உள்ளக வீதியில் மோட்டார் சைக்கிலில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவரை விரட்டிச் சென்ற நிலையில்,குறித்த குடும்பஸ்தர் விபத்திற்கு உள்ளாகிய நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த கிராமத்தைச் சேர்ந்த இராசமாணிக்கம் இராஜேந்திரன் (வயது-54) இன்ற இரு பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜிம்ரோன் நகர் கிராமத்திற்கான உள்ளக வீதியால் குறித்த குடும்பஸ்தர் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிலில் பயணித்த போது , உள்ளக வீதியில் பதுங்கி நின்ற மன்னார் காவல்துறையினர் குறித்த குடும்பஸ்தரை நிறுத்திய போது அவர் நிற்காது சென்ற நிலையில், அவரை துரத்திச் சென்றுள்ளனர்.
இதனால் குறித்த குடும்பஸ்தர் பயணித்த மோட்டர் சைக்கில் வீதிக்கரையில் காணப்பட்ட மின் கம்பத்துடன் மோதியதனால்விபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.-உடனடியாக குறித்த குடும்பஸ்தர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரனைகளை மன்னார் வீதிபோக்குவரத்துப்பிரிவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் நகர் பகுதியில் உள்ள பிரதான வீதிகளில் போக்கு வரத்துப்பிரிவு காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யாது, உள்ளக வீதிகளில்; கடமையில் ஈடுபடுவது தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.