பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை தம் வசப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றுவதும், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க் கட்சித் தலைவராக்குவதுமே தமது பிரதான இலக்காகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கவும் நாட்டைத் துண்டாடவும் மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் முன்னெடுக்கும் நோக்கங்கள் எமக்கு நன்றாகவே தெரிகின்றன. எனவே நாட்டைக் காப்பாற்ற வேண்டிய தேவை எமக்குள்ளது.
கடந்த ஜனதிபதித் தேர்தலின் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்துள்ளார். பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளார். ஆகவே இது போதுமானது. இன்று தேசிய பாதுகாப்பு விடயத்தில் பாரிய அச்சுறுத்தல் உள்ளது.
வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் சூழல் உள்ளது. வடக்கு முதல்வர் நாட்டைத் துண்டாடும் நோக்கத்தில் செயற்பட்டு வருகிறார். சிவாஜிலிங்கம் போன்றவர்கள் பிரிவினைவாதக் கொள்கையில் செயற்பட்டு வருகின்றனர். காவற்துறை அதிகாரங்கள், காணி அதிகாரங்களை கேட்டுக்கொண்டு அவர்கள் வடக்கில் மீண்டும் தனி ராஜ்ஜியமாக செயற்பட முயற்சித்து வருகின்றனர். இந் நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் நோக்கங்கள் மூலமாக விடுதலைப் புலிகளின் இலக்கு என்னவோ அது அரசாங்கத்தின் மூலமாகவே நிறைவேற்றப்படும். ஆகவே 20 ஆவது திருத்தச் சட்டத்தை தோற்கடிப்பது குறித்து சகல தரப்புகளுடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சி ஆசனத்தை கைப்பற்ற வேண்டும். அது பிரதான இலக்கு. குறிப்பாக இந்த அரசாங்கத்தின் ஆட்சி முடிவுக்கு வரும் வரையில் பாராளுமன்றத்தில்பிரதான எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவைக் கொண்டுவர வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவது குறித்தும் சிந்திக்கப்படுகிறது. இப்போது அரசாங்கத்தில் இருந்து பலர் வெளியேறி எதிர்க்கட்சிக்கு மாறியுள்ளனர். ஆகவே இப்போது கூட்டு எதிர்க்கட்சி பிரதான எதிர்க்கட்சியாக மாற்றம் பெற்றுள்ளது. எனவே மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக மாற்றும் நகர்வுகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.