சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப்புக்கு உறுதி அளித்தமையையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆராய்ச்சிக் கூடத்தை மேம்படுத்தி வருகின்றது என செயற்கைகோள் படங்களின் ஆதாரத்துடன் கண்காணிப்பு அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும் சிங்கப்பூரில் கடந்த 12ம் திகதி சந்தித்து பேசிய போது அணு ஆயுதங்களை அழிப்பதற்கு வடகொரிய கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டிருந்தார்.
. எனினும், எல்லா அணு ஆயுதங்களையும் அழிக்கும்வரை வடகொரியா மீதான பொருளாதாரத் தடை நீடிக்கும் என்று ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார். இந்நிலையில், வடகொரியா வின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும், ’38 நோர்த்’ என்கிற இணையதளம், வடகொரியா தொடர்ந்து அணு ஆராய்ச்சிக் கூடத்தை மேம்படுத்தி வருவதாக தனது இணையத் தளத்தில் கூறியுள்ளது.
வடகொரியாவின் முக்கியமான யாங்பையான் அணு ஆராய்ச்சி கூடத்தில் பணிகள் நடப்பதுடன், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன எனவும் வர்த்தக செயற்கைகோள் மூலம் கடந்த ஜூன் 21-ம் திகதி முதல் பெறப்பட்ட புகைப்படங்கள் அதை உறுதி செய்கின்றன எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகளும், அணு உலை, பொறியியல் அலுவலகம் போன்ற புதிய கட்டமைப்பு பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.