அரசாங்கப் பாடசாலையில் பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் சேமிப்பு நிதி மற்றும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்றும் கந்துவட்டிக்கொடுமையால் தவிப்பதாகவும் கூறி தமிழகத்தின் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் லோரன்ஸ் என்பவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார். விருப்ப ஓய்வு பெற்ற இவருக்கு 15 மாதங்கள் ஆகியும் பணபலன் மற்றும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை எனக் கூறி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு கொடுக்க வந்திருந்தார்.
இவர் பணிபுரிந்த பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் அதற்காகவே தான் பழிவாங்கப்படுவதாக மனுவில் குறிப்பிட்டிருந்த அவர் ஓய்வூதியம் பெறுவது சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் சிலருக்கு லஞ்சம் கொடுத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் கந்துவட்டிக் கும்பல் தன்னை மிரட்டுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்த ஆசிரியர் லாரன்ஸ், கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து மறைத்து எடுத்து வந்த விஷத்தை திடீரென குடித்தார்.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் விரைந்து செயல்பட்டு விஷத்தை தட்டிவிட்டனர். இருப்பினும் அவர் சிறிதளவு விஷம் குடித்திருந்த நிலையில் அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நேசமணி நகர் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.