Home இலங்கை இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்று சொல்வதில் தவறு ஏது?

இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்று சொல்வதில் தவறு ஏது?

by admin

வாரத்துக்கொரு கேள்வி…

இவ் வாரக் கேள்வி வரலாறு சம்பந்தப்பட்டது. எனினும் கேள்வி கேட்டவர் சற்று தடுமாற்றத்துடன் தான் கேள்வியைக் கேட்டுள்ளார்.

கேள்வி – இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்று ஒரு குண்டைத்தூக்கிப் போட்டு வருகின்றீர்களே! சிங்களப் பேராசிரியர்கள் இதுவரை கூறிவந்ததை முற்றாக மாற்றும் வண்ணம் உங்கள் கருத்து அமைந்துள்ளது. உங்கள் கூற்று சிங்கள மக்களை சீற்றமடையச் செய்யும் அல்லவா?

பதில் – உண்மையை சில தருணங்களில் கூறாது விடுவது பொருத்தமானதாகும். சில தருணங்களில் அதனை இடித்துக் கூற வேண்டியுள்ளது. ஒருவர் சிலரால் வாள் தடிகளுடன் துரத்தப்பட்டு வருகின்றார். அவர் உங்கள் வீட்டினுள் நுழைந்து ஒளிந்து கொள்கின்றார். வந்தவர்கள் அவரின் அடையாளங்களைக் கூறி ‘வந்தாரா?’ என்று கேட்கின்றார்கள். ‘ஆம்’ என்று அவரைப் பிடித்துக் கொடுத்தால் ஒளிந்தவரின் உயிர் உங்கள் முன்னிலையிலேயே பிரிய சந்தர்ப்பம் உண்டு. நீங்கள் முடியுமெனில் மௌனம் காக்கலாம் அல்லது ‘இல்லை’ என்று கூறலாம். ‘பொய்மையும் வாய்மை இடத்தே புரைதீர்ந்த–நன்மை பயக்கும் எனின்’ என்று பொய்யாமொழியினராகிய வள்ளுவரே கூறியிருக்கின்றார். அதாவது பொய்யான சொற்கள் குற்றமற்ற நன்மையைப் பிறர்க்கு நல்குமாயின் அச் சொற்கள் வாய்மைச் சொற்கள் போன்ற நிலையை அடைவன என்றார். அவ்வாறான சொற்களானது பிறர்க்கு நன்மை பயக்க வேண்டும். தனக்கு நன்மை தருவதாக இருந்தால் அது சுயநலம் ஆகிவிடும். ஆகவேதான் ‘புரை தீர்ந்த’ என்றார் வள்ளுவர். குற்றம் அற்ற என்பது பொருள்.

ஆனால் உண்மையானது சில தருணங்களில் வெளிக்கொண்டுவரப்படாது நம்மால் மௌனம் காக்கப்பட்டால் பொய்மைகள் நாடுபூராகவும் உலாவத் தொடங்கி விடுவன. இன்று அவ்வாறான ஒரு நிலையே எழுந்துள்ளது. பத்தாம் நூற்றாண்டில் சோழர் படையெடுப்பின் போது வந்தவர்களே இலங்கைத் தமிழர்கள் என்று கூறி வருகின்றார்கள் பெரும்பான்மையினர். உண்மை அதுவல்ல. இலங்கையின் மூத்த குடிகள் நாகர்கள் என்று அழைக்கப்பட்ட தமிழர்களே என்பது இப்பொது வரலாற்று ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. என்றாலும் சுயநலம் கருதி, சிங்கள அறிஞர்கள் உண்மையைத் தெரிந்தும் அதைத் திரிபுபடுத்தி சொல்லி வருகின்றார்கள். அவர்களின் பொய்மைகள் வாய்மைக்குள் அடங்கமாட்டா.

உங்களைப் போலவே ஒரு சிங்கள அன்பர் ஆத்திரத்துடன் எனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். உண்மைக்குப் புறம்பான தகவல்களை நான் பரப்பி வருகின்றேன் என்றார். அதற்கு உடனே நான் பதில் இறுத்தேன். எனது வரலாற்று அறிவின்படி தமிழரின் வரலாறு பற்றிய சில விடயங்களைச் சரியென்று ஏற்றுக்கொண்டுள்ளேன். அவற்றைப் பிழையென்று கூறக்கூடிய மேம்பட்ட அறிவு உங்களுக்கிருந்தால் உங்கள் கருத்தைக் கூறுங்கள். நான் நூல்களை வாசித்தறிந்து, எமது வரலாற்றுப் பேராசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து எனது தரவுகள் சரியா நீங்கள் கூறுபவை சரியா என்ற முடிவுக்கு வருகின்றேன் என்று கூறி பின்வரும் ஐந்து விடயங்களை மின்னஞ்சல் மூலம் அவர்முன் வைத்தேன்.

1. இலங்கையில் திராவிடர்கள் புத்த பெருமானின் பிறப்புக்கு முன்னரே இருந்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.

2. ஒரு முழுமையான மொழி என்ற முறையில் சிங்கள மொழி பரிணாமம் பெற்றது கி.பி 6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலேயே. அதற்கு முன் சிங்கள மொழி என்று ஒன்று இருக்கவில்லை.

3. நவீன DNA சோதனைகள் தற்போதைய சிங்கள மக்கள் பண்டைய திராவிடரின் வாரிசுகளே என்பதை உறுதிப்படுத்துகின்றன. திராவிடர் என்ற சொல்லும் தமிழர் என்ற சொல்லும் தமிழரையே குறிப்பிடுகின்றன. சமஸ்கிருதம் பேசிய மக்களுக்கு தமிழர் என்று உச்சரிக்க முடியாததால் அவர்களே தமிழர்களைத் திராவிடர் என்று அழைத்தார்கள்.

4. சிங்கள மொழியானது தமிழ், பாளி மற்றும் அக் காலத்தைய பேச்சு மொழிகளில் இருந்தே உருப்பெற்றது.

5. சிங்களவர் என்ற முறையில் வட மாகாணம் பூராகவும் எந்தக் காலகட்டதிலும் சிங்கள மக்கள் இங்கு வாழவில்லை. தமிழ் மக்கள் வாழ்ந்த பண்டைய இலங்கையில் பின்னர் ஒரு கட்டத்திலேயே சிங்கள மக்கள் உருவெடுத்தார்கள். அவர்கள் தற்போதைய வட மாகாணத்தின் தெற்குப் பக்கமாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர் எனது கூற்றை மறுத்து தனது தரவுகளை சமர்ப்பிப்பதாகக் கூறியுள்ளார். எனது கூற்றுக்களே அவர்களைக் கோபமடையச் செய்து சிந்திக்கவும் வைத்துள்ளது. உண்மை நிலையை உணர்த்தினால் சிங்கள மக்கள் சீற்றமடைவார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் சிங்கள மக்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் சிங்கள மக்கள் இதுவரையில் நிர்மாணித்துள்ள பொய்மையான வரலாற்றை எதிர்ப்பவன். உண்மை வெளிவர வேண்டும் என்ற விருப்பம் உடையவன்.

ஒரு திருமணம் நடக்கவிருந்தது. ஒரு வீட்டுக்குக் குடியிருக்க வந்த ஒரு குடும்பத்தவர் தாங்கள் அந்த வீட்டுச் சொந்தக்காரரின் உறவினர் என்று கூறி தமது வாரிசுக்கு திருமணமும் நிச்சயித்து விட்டார்கள். ஆனால் இரு குடும்பங்களுக்குமிடையில் எதுவித சொந்தமுமில்லை. குலம் கோத்திரம் பின்னணி எல்லாம் வௌ;வேறு. வீட்டுச் சொந்தக்காரருக்கு இது தெரிய வந்தது. ஆயிரம் பொய் சொல்லி என்றாலும் பெண்பிள்ளை ஒருவளைக் கரை சேர்க்க வேண்டும் என்று எம் மக்கள் பேசி வந்துள்ளதை அவரும் அறிந்திருந்தார். அவர் மௌனம் காத்திருக்கலாம். ஆனால் பொய் சொல்லிக் கல்யாணம் நடக்கின்றதே. அது எதிர்காலத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் யோசித்துப் பார்த்தார். தனது கடமை உண்மையை உள்ளவாறு கூறிவைப்பதே என்பதை உணர்ந்தார். மாப்பிள்ளை வீட்டார்கள் சொந்தம் பற்றி வேறு நபர்கள் மூலம் வினாவிய போது உண்மையைக் கூறினார். எந்தவித சொந்தமுமில்லை; அவர்கள் குடியிருக்க வந்தவர்கள் என்பதைத் தெளிவுபடுத்தினார். இதனால் நிட்சயதார்த்தத்துடன் திருமணம் தடைப்பட்டது. இந்த நிலையை ஏற்படுத்தியமை பிழையென்று கூறுவோரும் உண்டு. சரியென்று அடித்துக் கூறுவோரும் உண்டு.

எது எவ்வாறிருப்பினும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஊரில் உலாவவிட்டது குடியிருப்பாளரின் தவறு! தான் தவறைச் செய்து விட்டு, பொய்யைப் புனைந்துரைத்து விட்டு, உண்மையை வெளிக்கொண்டு வந்தவரின் மீது சீற்றமடைவது குடியிருப்பாளரின் பிழை. அதை உணராமல் பேசுவது பொய்மையை உண்மையாக்குவது போலாகும். திருமணமானபின் உண்மை வெளிவந்தால் தம்பதியினரிடையேயும் குடும்பத்தினரிடையேயும் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை நாங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். பொய்மையை உண்மை என்று சித்தரித்து ஒரு சாரார் நன்மைகளைப் பெற்று வரப் பார்ப்பதும் கருத்துக்கெடுக்கப்பட வேண்டும். இவ்வாறான நிலையில்த்தான் பொய்மைகளை விமர்சித்து வருகின்றேன்.

பொய்மைகளின் வழிநின்று சீற்றமடைபவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுவது பிழையன்று. அவ்வாறு செய்யாவிட்டால் பொய்மையை எப்ப வேண்டுமானாலும் பலாத்காரமாக நிலைநிறுத்தலாம் என்றாகிவிடும். உண்மைக்கு ஒரு பலம் உண்டு. அதுபற்றி ஆதிசங்கரரின் குருவின் குருவான கௌடபாதர் என்பவர் கூறியுள்ளார். உண்மையானது ஆயிரம் பொய்மைகளுக்கு மத்தியிலும் சுடர் விட்டுப் பிரகாசிக்கக் கூடியது என்றார். அதன் சக்தி அது. எனவே உண்மையைக் கூறினால் மற்றவர்கள் ஆத்திரப்படுவார்கள் என்று எக்காலத்திலும் மௌனம் சாதிக்க வேண்டும் என்று எண்ணுவது மடமை.

பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த தமது அண்மைய நூலான ‘இலங்கைத் தமிழர்வரலாறு – கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் – கி.மு 250 – கி.பி 300’ என்ற நூலின் தமது பதிப்புரையில் (பக்கம் ஓஐஏ) பின்வருமாறு கூறுகிறார் –

‘இலங்கையின் மூன்றிலொரு பாகத்திலே தமிழர் சமுதாயம் கி.மு முதலிரு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டது என்பதையும் தொடர்ச்சியான ஒரு நிலப்பகுதியிலே தமிழ் மொழி பேசுவோர் வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கிவிட்டனர் என்றும் சொல்லக் கூடிய காலம் வந்துள்ளது. நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் என்பதாலும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டைப் பிரதானமாக அவர்களே இலங்கையிற் பரப்பினார்கள் என்பதாலும் கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலைபெற்றுள்ளமை உய்த்துணரப்படுகின்றது. தமிழ் மொழியின் தொன்மை பற்றி தமிழ்நாட்டுத் தொல்பொருட் சின்னங்களை ஆதாரமாகக் கொண்டு நிர்ணயிக்க முடியாதவற்றை இலங்கையிற் கிடைக்கின்ற தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களின் அடிப்படையிலேயே சொல்ல முடிகின்றமை ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்’.

ஆகவே இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்று சொல்வதில் தவறு ஏதும் இருப்பதாகக் கூறமுடியாது.

ஸ்ரீலங்கா கார்டியன் என்ற பத்திரிகையின் 25.01.2013ந் திகதியப் பிரதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது –

‘சிகல’ என்ற சொல் (பாளி மொழியில் சிங்கம்) முதன் முதலில் தென்படுவது தீபவன்ச என்ற நூலில் (கி.பி. 4-5ம் நூற்றாண்டுகளில்). இந்த நூலில் ‘சிகல’ என்ற சொல்லானது ஒரு முறையே தென்படுகிறது. சிங்கம் என்ற சொல்லின் காரணமாகவே இந்தத் தீவு ‘சிகல’ என்று அழைக்கப்பட்டது. 5ம் 6ம் நூற்றாண்டு காலத்தைய நூலாகிய மகாவம்சத்தில் ‘சிகல’ என்ற சொல் இருமுறையே குறிப்பிடப்படுகிறது. ஆனால் கிறீஸ்துவுக்கு முன்னைய இராமாயணத்தில் இத்தீவு இலங்கை (லங்கா) என்றே அழைக்கப்பட்டுள்ளது. தீபவன்ச இவ்வாறான சொற்களைப் பாவிப்பதற்கு முன்னர் இலங்கையில் சிங்கள இனம் என்று ஒன்று இருக்கவில்லை. கி.பி. 4ம், 5ம் நூற்றாண்டுகளில் கூட பின்னர் சிங்கள மொழி என்று அழைக்கப்பட்ட மொழி வழக்கிற்கு வரவில்லை. தீபவன்ச, மகாவன்ச என்ற நூல்களை அம்மொழியில் எழுதும் அளவுக்கு அம்மொழி வெளி வந்திருக்கவில்லை’.

ஆகவே அந்தக் காலத்தில் சிங்களம் பேசாதவர்களை சிங்களவர் என்று அடையாளப்படுத்துவது தவறானது. எனவே இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்பதற்கு தற்போது போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. இதுவரை சிங்கள அறிஞர்களால் குறிப்பிட்டு வரப்பட்ட வரலாறு பிழையானது. உண்மையை உள்ளவாறு உரைப்பது தவறாகாது. சினமூட்டுதல் தவறு என்றால் எமது உண்மை வரலாறு எஞ்ஞான்றும் வெளிவராது போய்விடும். சினமூட்டியேனும் உண்மைகளை வெளிக் கொண்டுவர வேண்டும் என்பதே எனது விருப்பம்.
நன்றி

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Spread the love
 
 
      

Related News

1 comment

லோகேஸ்வரன் June 28, 2018 - 11:22 pm

தமிழர்கள் தங்கள் உண்மையான வரலாறு பற்றி பெரிய அளவில் இலங்கையிலும் மற்றும் வெளிநாடுகளிலும் அடிக்கடி விழிப்புணர்வை ஏற்படுத்தி ஸ்ரீலங்கா அரசாங்கத்தையும் உலக நாடுகளையும் தமிழர்களின் வரலாற்றை ஏற்க வைக்க வேண்டும்.

தமிழர்களின் வரலாறு பற்றிய ஆராய்ச்சிகள், மாநாடுகள், ஆய்வரங்குகள், கருத்தரங்குகள், பட்டறைகள், பயிற்சிகள், வகுப்புகள், கண்காட்சிகள், போட்டிகள் என்பவற்றை குறைந்தபட்சம் ஒவ்வாரு வருடமும் உலகளவில் நடத்த வேண்டும்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More