Home இலக்கியம் பேராசிரியர் சி.மெளனகுருவின் நெறிப்படுத்தலில் மஹகவியின் புதியதொரு வீடு….

பேராசிரியர் சி.மெளனகுருவின் நெறிப்படுத்தலில் மஹகவியின் புதியதொரு வீடு….

by admin

பாக்கியராஜா மோகனதாஸ் (துறைநீலாவணை)

பேராசிரியர் சி.மெளனகுருவின் நெறிப்படுத்தலில் உருவான மஹகவியின் புதியதொரு வீடு நாடக அளிக்கையினை, அடிப்படையாக கொண்ட திறனாய்வு.
———————————————————————————–

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த து.உருத்திரமூர்த்தியின் கவிதை, பேச்சோசைப்பாங்கிலமைந்த புதியதொரு வீடு நாடக எழுத்துருப் பாத்திரங்களை, உயிர்த்துடிப்புடன் உலவ விட்ட சிறப்பு நெறியாளரைச் சாரும். மகாகவியின் சிந்தனையில் 1940 ஆம் ஆண்டு உருவான கதைக் களத்துக்குஅரங்க கலை ,கலைஞர்கள் மற்றும் அரங்க கைவினையாளர்களைக் கொண்டு மிக காத்திரமான கனதியான நெறிப்படுத்தல் மூலம் நாடக நெறியாளர், பார்ப்போரை நாடக அளிக்கைக்குள் ஈர்க்க வைத்துள்ளார்.

மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடமும் எங்கள் ஆசான் கலைக்கூடமும் இணைந்தளித்த மஹாகவியின் புதியதொரு வீடு நாடக மேடையேற்றத்தினை,

மட்டு தேவநாயகம் மண்டபத்தில் கடந்த 17 ஆம் திகதி பார்க்க கிடைத்தது.நான்கு தடவை மேடையேற்றவே என தயாரிக்கப்பட்ட நாடகம் பார்ப்போரின் தேவையுணர்ந்து ஐந்தாவது தடவையும் மேடையேறியது.ஐந்து அளிக்கைகளிலும் பார்ப்போர் மண்டபம் நிரம்பி வழிந்தனர்.

தரமற்ற எழுத்துருக்களையே காத்திரமாக தயாரிக்கும் நெறியாளர்கள், மிக காத்திரமான நாடகப் பனுவலை காத்திரமாக தயாரிப்பர்.கலைஞர்களினதும் மக்கள் சமூகத்தின் பிரதிநிதிகளான கோரசினதும் துணைக்கலைகளினதும் பங்களிப்பு நாடக கனதிக்கு பக்கபலமாக பின்னணியாக இருந்துள்ளது.

புதியதொரு நாடகஇயக்குனர் கலைஞனில் கலைஞனாகவும் எழுத்துரு அளிக்கை வியாக்கியானி ப்பவராகவும் சர்வாதிகாரியாகவும் செயற்பட்டதை மேடையேற்ற அளிக்கை ஊடாக அறிய முடிந்தது.

நாடகக் கதைக்கரு
——————————————–

மீனவ சமூகத்தினது குடும்பத் தலைவிகள் தங்கள் உறவுகளை நாளாந்தம் கடலுக்கு அனுப்பும்போது அனுபவிக்கின்ற வேதனைகள் மயிலி எனும் பாத்திரத்தினூடாக சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.மயிலி தன் கணவன் மாயனை கடலுக்கு மீன் பிடிக்க அனுப்புகிறாள்.மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற மாயன் இடி மின்னல் புயல் தாக்கத்திற்குள்ளாகி மாயமாகவே மறைந்ததனால் ஆறு வருடங்களாகியும் வீடு வந்து சேரவில்லை. இதை நினைத்து ஆறு மாதங்களாக மயிலி அழுதழுது வருந்துகிறாள்.

மீனவ சமூகத்தில் மிக முக்கிய பொறுப்புகளை,சமூக தொண்டுகளை புரிந்துவரும் உள்ளத்தில் மாசில்லாத மாசிலனை,மயிலி உட்பட மறைக்காடர் ஆகியோர் பல தடவை திருமணம் செய்துகொள்ளச் சொல்லியும் தன் அண்ணனின் மனைவி மயிலியினதும் அண்ணனினது மகன் மன்னவனினதும் பாதுகாப்புத் தேவை கருதி அவர்களோடே வாழ்ந்து வருகின்றான்.

சமூகத்தின் பிரதிநிதிகளாக சித்திரிக்கப்பட்டுள்ள மையுண்ட நெடுங்கண்ணாத்தை ஊர்ச்சமூகம் கதைக்கும் கதைகளை மிகைப்படுத்தி மயிலியிடம் கூற மயிலி வருத்தப்பட்டு ஆலயம் செல்கிறாள்.ஆலய மடத்தில் தங்கியிருக்கும் மறைக்காடரிடம் தங்குவதற்கொரு இடம் கேட்க அவர் தான்,அரச சேவையிலிருந்ததனால் தற்பொழுது ஓய்வுதியப் பணத்தில்தான் வாழ்க்கை நடத்துகிறேன் என்கிறார். அவ்வேளையில் அவ்வழியால் வந்த மாசிலன் மன்னவன் வீட்டில் பசியோடு இருக்கிறான்.நானும் பசியோடுதான் இருக்கிறேன் வீடு வந்து சாப்பாடு தாருமாறு கேட்க மயிலி மனை செல்கிறாள்.

வகைமாதிரிப் பாத்திரங்களாக சித்திரிக்கப்பட்டுள்ள மையுண்ட நெடுங்கண்ணாத்தை,மறைக்காடர் ஆகியோரின் வற்புறுத்தலுக்கு இணங்க மயிலியும் மாசிலனும் திருமணம் செய்து ஒரு குழந்தையினையும் பெற்றெடுக்கின்றனர் .இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் மாயமாய் காணாமல் போன மாயன் வீடு வருகிறான்.குழந்தையை காணுகிறான்.

நெடுந்தூரம் நீண்ட நாள் ஓடி நினைவெல்லாம் நீயாக மீண்டேன்.இதுவோ விளைய இருந்ததம்மா எனும் மாயனின் வார்த்தைகள் உள்ளத்தை உலுக்குன்றது.எவன் பிள்ளை என மாயன் கேட்க மயிலி என்னுடைய பிள்ளை என்கிறாள் மாசிலன் என் குழந்தை அண்ணை என்கிறான். இந்நிலை

நாடகத்தின் திருப்பு முனை
————————————————————–
நாடகத்தின் முக்கிய திருப்புமுனைகளாக அமைகிறது .மாயனின் வாழ்க்கை இயற்கையின் சீற்றத்தினால், வாழ்வும் தாக்கத்திற்குள்ளாகின்றது.எத்தனை துயர் வந்த போதும் சோர்ந்துவிடாது அதனை சவாலாக ஏற்றுத் துணிவோடு முன்னேறுவேன் என மாயன் உணர்ந்து தன் மகன் மன்னவனுடன் இடையிடையே வீடு வருவேன் என கூறி கடலுக்குச் செல்கிறான்.கடல் தொழிலில் ஈடுபடுகிறான் மாயனையும் மன்னவனையும் காண்பதற்காக மயிலி மாசிலனின் மகனுடன் கடற்கரைக்கு வந்து அவ்விருவரின் செயற்பாட்டை காண்பதுடன் நாடகம் இன்பமாக நிறைவுபெறுகிறது.

நாடக அளிக்கை முறைமை
————————————————————-

இவ் எழுத்துருத் தாக்கம் மேடையில் எவ்வாறு வெளிப்பட்டுள்ளதென்பதை நாடக அளிக்கை ஊடாக பலராலும் காணமுடிந்தது. புதியதொரு வீடு நாடகத் தாக்கம் தொடர்பாக பார்ப்போர் மந்தியிலெழுந்த என்னுள்ளத்திலெழுந்த மனப்பதிவுகளை நினைவுக்கு எட்டிய வகையில் வாசகர்களுக்காக விபரிக் விழைகிறேன்.நீங்களும் புதியதொரு வீடு அளிக்கையினை நுகரலாம் வாருங்கள்.

நாடகப் பாத்திரங்களுடன் இணைந்து கோரஸ் குழுவும் அளிக்கையினை மிகச் சிறப்பாக முன்னெடுத்திருந்தது. சமூகத்தின் கூட்டுக் குழுமமான கோரஸ் நாடகப் மாந்தர்களின் செய்திகளை தெளிவாக எடுத்துரைத்திருந்தது.எட்டு பெண்களும் உட்பட பத்து பேரைக்கொண்ட பாடகர் குழுவான கோரஸ்,நாடகத் தொடக்கம் முதல் இறுதி வரை தங்களது பணியினை களைப்பின்றி செய்திருந்தது
.
இடி மின்னல் மழை காட்சிகளாக,கடலுக்கும் செல்லும் காட்சி,திருமணக் காட்சி,வலை இழுத்தல் என ஒவ்வொரு பெருங்காட்சிகளும் கோரஸ் மூலம் வெளிப்பட்டது.நாடகத் தாக்கத்தினை மேம்படுத்துவதில் கோரஸ் தன் பணியினை விட்டு வைக்கவில்லை என்றே கூறலாம். நவீன நாடக நெறியாளரான ஜேர்மனியைச் சேர்ந்த பேட்டோல் பிரக்ட்டின் கோரஸ் நுட்ப முறையினை நாடக நெறியாளர் மிக சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்.

மேடைப்பொருட்கள் நடிகர்களுக்கு இடைஞ்சலாக அமையாமல் பயன்படுத்தப்பட்ட ஒரு சில மேடைப் பொருட்கள் பார்ப்போருடன் கதை பேசுவதாக,நாடக களச்சூழலை வெளிக்கொணர்வதாகவிருந்தது.

அரங்கிலே வலை,கட்டுமரம்,கட்டுமரத்தின் மீது லாம்பு(லாந்தர்) ,வீடு,ஆலயம் போன்றவற்றுக்கூடாக மீனவச் சமூகத்தின் சமூக பண்பாட்டை அறியக் கூடியதாக விருந்தது.1940 ஆம் ஆண்டிலிருந்த கிடுகளான கூரையமைப்பு வீட்டின் முகப்புத் தோற்றத்தை காட்டுவதாயிருந்தது .அவ்வீட்டின் மற்றைய பகுதி ஆலய சூழலை தோற்றுவித்தது. மேடையின் கீழ் இடது முன்புறத்தில் வலை தொங்கவிடப் பட்டிருந்த்து.வலது பகுதியில் கட்டுமரத்தின் மீது லாந்தர் விளக்கும் பார்ப்போரை அண்மித்த பகுதியில் வைக்கப் பட்டிருந்தது.வீட்டுடன் இணைந்ததாக தொட்டிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மாயன் மீண்டு வந்ததும் வீட்டினுள் தொங்கவிடப்பட்டிருந்த தூண்டிலை மயிலி எடுத்துக்கொடுக்கும் போது தூண்டில் கைப்பொருளாக அரங்கில் காட்டப்படவில்லை. தூண்டிலும் காட்டப்பட்டிருந்தால் மிகசிறப்பாக இருந்திருக்கும்.

நாடகத்தில் இசை
————————————————-

மேடைக்கு அண்மித்த வகையில் இசைக்குழுவினர்களும் ஒலி, ஒளியமைப்பாளர்களும் சிறப்பாக தங்கள் பணியினை ஆற்றியிருந்தும் சிற்சில இடங்களில் வளப் பற்றாக் குறையினால் செவிபுலப்பார்ப்போருக்கு ஏமாற்றத்தை கொடுத்தனர்.

ஓர்கன் வாத்தியக் கலைஞர் இடி முழக்க புயல் மழை காட்சியினையும் பாத்திர மனவுணர்வுகளையும் சிறப்பாக வெளிக்காட்டியிருந்தார். இருந்தும் ஓரிடத்தில் ஒலி வாங்கிபற்றாக்குறை ஒலிவாங்கியின்மையினால் பட்சிகளின் ஒலியினை கணப்பொழுதில் செவிப்புல அரங்காக்கவில்லை.

வானொலி நாடகங்களை நாம் மனதை மேடையாக கொண்டு புரிந்துகொள்வதைப் போல பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இசை,பாடல்கள்,ஒலி,அசைவுகள்,சத்தம்,இரைச்சல் ஆகியவற்றை உணர்ந்துகொண்டே நாடக அளிக்கையினை ரசிக்கின்றனர். பார்ப்போர் கூடத்தினுள் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அளிக்கையின் சிற்சில கணப்பொழுதில் செவிப்புல அரங்கை நுகரவில்லை என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது. நாடக அளிக்கை என்பது கட்புல செவிப்புல அரங்காகும் .ஒலியமைப்பில் சிற் சில குறைகள் இருந்தன வேயன்றி நிறைகளே அதிகமாக தென்பட்டதென்பதை மனங்கொள்ள நேர்ந்தது.

நாய் குரைக்கும் சப்தத்தினை வெளிப்படுத்திய அரங்க வாய்ப்பாட்டுக் கலைஞர் துஜான், ஒருகணபொழுதில் பாடலின் ஒரு வரியினை பிற்பாட்டுக்காரர் பாடாத போது தனது குரலினை உயர்த்திப் பாடியது கொஞ்சம் நெருடலாகவே இருந்தது.நடன நாடகத் துறை விரிவுரையாளரும் வாத்தியக் கருவிகளின் விற்பனரும் பாடல்களை எழுத்துரு அளிக்கை மனவுணர்களுக்கேற்ப பாடுபவருமான க.மோகனதாஸன் தனது வகிபங்கினை சிறப்பாக செய்திருந்தார்.க.மோகன தாசனினதும் துஜானினதும் குரலிசைப் பாடல்கள் நாடக் தாக்கத்தை மேம்படுத்துவதில் பிரதான பங்கு வகித்திருந்தன. மோகன தாஸனின் பாடல்கள் கேட்க கேட்க பார்ப்போரை ஈர்க்கும் தன்மையுடையதாகவிருந்தது. தபேலா கலைஞர், ஆர்மோனியக் கலைஞர் பிற்பாட்டுக்காரர் ஆகியோரும் தங்கள் தங்கள் பணியினை சிறப்பாக தொய்வில்லாமல் செய்திருந்தனர்.

ஓளியமைப்பு
———————————————

பாத்திரங்களினது உள்ளக் குமுறலை,நாடக களத்தை,சூழலை பொருளுள்ள கலையம்சம் வெளிப்படுத்தும் வகையில் ஒருசில ஒளி விளக்குகளை பயன்படுத்தி ஒளியமைப்பாளர் வெளிக்காட்டியிருந்தார்.புதியதொரு வீடு நாடக பின்னணியை ,நாடகப் பாத்திரங்களை,வேடவுடை,ஒப்பனை,காண்பிய மூலகம் ஆகியவற்றை ஆற்றுகை வெளியில் நடிகர்களின் உணர்வுகளுக்கூடாக பார்ப்போருக்கு ஏற்படுத்த வைத்துள்ளார்.

புதியதொரு வீடு, பார்ப்போர் மத்தியில் மிக காத்திரமாக தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒளியமைப்பின் பங்களிப்பும் ஒளியமைப்பாளர் த.பிரதீப்பின் ஒளிக்கோலங்களும் மிகுந்த செல்வாக்கு செலுத்தின என்றால் மிகையாகாது.

பாத்திரங்களுக்கேற்றதாக நெய்தல் நிலத்திற்கேற்றதாக கோயில் பண்பாட்டு சூழலுக்கேற்றதாக ஒவ்வொருவரினதும் வேடவுடை ஒப்பனை அமைந்திருந்தும் பாடகர் குழுவான கோரஸின் வேடவுடை சமஸ்கிருத சிங்கள பண்பாட்டு அம்சங்களை நினைவுபடுத்துவதாகவிருந்தது.

உடை ஒப்பனை
——————————————–

மயிலி பாத்திரம் சேலையுடன் கூடிய தமிழ்ப் பண்பாட்டு வேடவுடை ஒப்பனையிலும் முகச் சுருக்கத்துடனும் நரைமுடிகளுடனும் பழைய சேலையுடன் கூடிய விதவைப் பெண் கோலத்துக்கேற்ப மையுண்ட நெடுங்கண்ணாத்தையின் வேடவுடை அமைய, மறைக்காடர் சேர்ட் இன்றி கரை வேஷ்டியுடன் ஆலயத்தில் தொண்டு செய்து ஆலயச் சூழலுடனான வேடவுடையிலும் மாசிலன் பாத்திரம் கடல் வாழ் சூழலுக்கேற்ப சாரத்தை எந்நேரமும் மடித்து கட்டி சேர்ட் இன்றி வெனியனுடனும் சுட்டிப்பையனான மன்னவன் சிறு காற்சட்டை சேர்ட்டுடனும் காட்சியளிக்க மாயன் பாத்திரத்தினது வேடவுடை சிங்கள சமூகத்தையோட்டியதாக அமைந்திருந்தது. மாசிலனின் சகோதரரான மாயன் பாத்திரம் சேர்ட் சாரம் அணிந்திருந்தும் அவ் உடைகள் தமிழ் மீனவ சமூக உடைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைந்திருக்க வில்லை என பலராலும் எண்ண முடிந்தது.

நெசவு,பட்டு உடைகளை எமது பாரம்பரிய தமிழ்ச் சமூகத்தினர் அணிகின்றனர்.இருந்தும் பெருவாரியாக பரவலாக அணிவதில்லை. சிங்கள வட இந்திய சமூகத்தினரே இவ் உடைகளுக்கு வழமையாக பழக்கப்பட்டுள்ளனர் என்பதை நினைவு கூற விழைகின்றேன் அதே போன்று நெய்தல் கடல்வாழ் சூழலினையும் அவர்கள் அனுபவிக்கும் துன்ப துயர இன்னல்களை வெளிப்படுத்தும் வகையிலான சிவப்பு நீல வர்ணங்களாலான உடையமைப்பு பொருத்தமாக கோரசிக்கு வடிவமைக்கப்பட்டிருந்தும் பெண்களினது கூந்தல் அமைப்பு குடுமி அமைப்பிலும் தலையிலுள்ள சீலையாலான கட்டும் அமைப்பு தமிழ்ப்பாரம்பரிய சூழலைத் தோற்றுவிப்பதாக அமையவில்லை என எண்ணத் தோன்றுகிறது.இவை சிங்கள சமஸ்கிருத பெண்களின் கூந்தல் பாரம்பரியத்தை நினைவுபடுத்துவதாகவேயுள்ளது.

மாயனதும் கோரரஸினதும் வேடவுடை மாத்திரமே பண்பாட்டு சூழலுக்கு பொருத்தமான வகையில் அமைந்திருக்கவில்லை. ஏனைய பாத்திரங்களினது வேடவுடை ஒப்பனைகள் மிகச் சிறப்பாக பாத்திரத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை அளிக்கையின் மூலம் கண்டுகொள்ள நேர்ந்தது.

மாயன்,மாசிலன்,மயிலி ஆகிய பாத்திரங்கள் முதன்மைப் பாத்திரங்களாக படைக்கப்பட்ட போதிலும் மையுண்ட நெடுங்கண்ணாத்தை,மறைக்காடர் ஆகியோர் குறித்த கரையோர வாழ் மீனவச் சமூகத்தின் பிரதிநிதித்துவப் பாத்திரங்களாக சித்திரிக்கப்பட்டுள்ளனர்.

பாத்திர வார்ப்பு, நடிப்பு
—————————————————

ஒன்றுக்கொன்று துணையாகும் பாத்திரங்களாக(CO – OPRATIVE CHARACTER) மயிலியும் மையுண்ட நெடுங்கண்ணாத்தையும் சித்திரிக்கப்பட்டுள்ளது.மயிலி தனது கணவனுடனும் பிள்ளையுடனும் சந்மோசமாக வாழ மையுண்ட நெடுங் கண்ணாத்தை கணவனையிழந்த விதவையாக பிள்ளை யற்றவளாக படைக்கப்பட்டுள்ளது.இவற்றை யதார்த்த மரபில் நேர் எதிர் கதாபாத்திரங்கள் எனக் கூறுவர்.

புதியதொரு வீடு நாடகத்தில் மயிலி பாத்திரத்திற்கு எதிர் பாத்திரமாக மையுண்ட நெடுங்கண்ணாத்தை பாத்திரம் சித்திரிக்கப்படுகிறது.இதனை NEGATIVE EMPHASIS என நடப்பியல் அரங்கில் கூறுவர்.ஒரு குடும்பத்தை அழுத்திக் காட்ட ஏனைய குடும்பத்தை பயன்படுத்துவர்.
எந்தவொரு நாடகத்திலும் எதிர்ப்பாத்திரம்(NEGATIVE CHARACTOR) இல்லையாயின் நேர்ப்பாத்தி்த்தின் குணவியல்பு சிறப்புகளை தனித்துவங்களை அறியமுடியாது போய்விடும் என்பர்.

அந்த வகையில் ஒவ்வொரு பாத்திரங்களும் தத்தமது நடிப்பினை அரங்கில் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். அதில் குறைகளை காண்பது அரிதாகவே இருந்தது. மயிலி பாத்திரம் தமிழ் பண்பாட்டு சூழலுக்கேற்ப சமூகத்துக்கேற்ப தனது நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தும் சிற்சில காட்சிகளின் போது குறித்த உணர்வுகளை வெளிப்படுத்தாமல் கன்னத்தில் குழி விழந்து சிரிப்பு வந்தும் சிரிப்பினை காட்டிக்கொள்ளாத நிலையில் தனது நடிப்பினை வெளிப் படுத்தியிருந்தாள் .மன்னவன் மேடையில் சுட்டிப் பையனாகவே காத்திரமாக தனது நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தான். மறைக்காடர் தமிழ் பண்பாட்டுச் சூழலுக்கேற்ப நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மாசிலன் மீனவனாகவே அசலாகவே அரங்கில் உலாவந்தான் மாயன் தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்த போதிலும் மீனவத் தொழிலாளிக்குரிய வேடவுடை தோற்றத்தால் மத்தியதர வகுப்பைச் சேர்ந்தவனாகவே சித்திரிக்கப்பட்டிருந்தான்.

யதார்த்த விரோத ஓயிலாக்க முறையிலமைந்த இந்நாடகம் பேட்டோல் பிரக்ட்டின் அந்நியப்படுத்தல் உத்தியினைக் கொண்டு நெறியாளரால் நெறிப்படுத்தப்பட்டுள்ளது.நாடகம் முழுவதிலும் இடைவெட்டிய பின்னணி பாடல்கள்,ஆடல்கள என்பன பார்ப்போரை இடைக்கிடையே தட்டிக்கொடுத்திருந்தது.

மயிலி,மாயன்,மாசிலன்,மன்னவன்,மையுண்ட நெடுங் கண்ணாத்தை,மறைக்காடர் ஆகியோர் தத்தமது பாத்திரத்தை பாத்திரப்பண்புகளையுணர்ந்து சித்திரித்ததுடன் பல்வேறு காட்சிகளை, கூட்டுக்குழுமமான கோரசும் வெகு சிறப்பாக சித்திரித்திருந்தது.அனைவரும் தத்தம் பாத்திரங்களின் உடலியல்,உளவியல்,சமூகவியல் பண்புகளையறிந்து மேடையில் வாழ்ந்துகாட்டினர்.

மையுண்ட நெடுங்கண்ணாத்தை சமூகத்தின் பிரதிநிதியாக தனது நடிப்பினை எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி மிகைப் படுத்தாமல் யதார்த்தமாக வெளிப்படுத்தியிருந்தது.சமூக ஊர்ப்புதினங்களை மயிலியிடம் இரட்டை அர்த்தத்தில் கூறும் முறைமையிலும் மயிலியினை மாசிலுடன் இணைத்து வைப்பதற்காக மேற்க்கொள்ளும் பிரயத்தனமும் வயதுக்கேற்ற நடையுடை பாவனை நடத்தைகளும் சிறப்பாக பாத்திரத் திற்கேற்ப வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

நாடக கதையோட்டத்திற்கு, நாடக காட்சிக்கு பங்கம் விளைவிக்காமல் மையுண்ட நெடுங்கண்ணாத்தை அளிக்கையின்போது பிட் மேடை வெண்திரைக்கு பின்னால் சென்றது பார்ப்போருக்கு நெருடலையும் மேடை முகாமைத்து வத்தின் குறையினையும் வெளிக்காட்டியிருந்தது.

நாடகத்தில் பின்நோக்கு உத்திகள் பார்ப்போரை சிந்திக்க வைக்கின்றது. நாடகம் தொடங்கி ஐந்து நிமிடங்களில் பின்னோக்கி நகர்கின்றது பின்னோக்கி காட்சிகள் மாயன் வாழ்ந்த வாழ்க்கை முறை சிறப்பாக வெளிப் படுத்தப் பட்டுள்ளது.நாடகம் நிறைவு பெறுவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னதாக நாடகம் தொடங்கியே காட்சிக்கே நாடகம் மீள வருகின்றது. இவ்வாறான உத்திகள் பார்ப்போருக்கு நினைவுகளை ஏற்படுத்தவும் சிந்திக்கவும் செய்கின்றது.

யதார்த்த கதை,பாத்திரங்களை பார்ப்போருக்கு சுவைபட ஓரிடத்தே கொடுக்க வேண்டுமானால் நாடகத் தயாரிப்பில் யதார்த்த விரோத தன்மையினை கையாள வேண்டிய நிலையிலுள்ளது.மாயன்,மாசிலன் நடந்து செல்லும் காட்சிகள் உட்பட பல காட்சிகள் மோடிமையில் வெளிப்பட்டுள்ளது. மாயன்,மன்னவன்,மையுண்ட நெடுங் கண்ணாத்தை ,மயிலி,கோரஸ் ஆகியோரின் செயற்பாடுகள்,நடத்தைகள் முறையே மோடிமைப்பாணியில் வெளிப்பட்டிருந்தது.

அசைவுகளே நாடகத்தை உயிரத்துடிப்புள்ளதாக்குகின்றது.அந்த வகையில் ஒவ்வொரு பாத்திரங்களினுடைய அசைவுகளும் அளிக்கையின் கனதியறிந்து தேவையறிந்து பிரயோகிக் கப்பட்டுள்ளதென்பதை கண்கூடாக காண நேர்ந்தது.

பேச்சோசை கவிதையிலமைந்த புதியதொரு மோடிமைப் பாணியில் தயாரிக்கப்பட்டுள்ளதென்பது வெளித்தெரிந்த உண்மையாகும்.

52 நபர்கள் இத்தயாரிப்பின் பின்னணியில்
———————————————————————–

நடிகர்கள்,கலைஞர்கள்,கைவினையாளர்கள்,கோரஸ்,துணைக்கலைஞர்கள் உட்பட 52 நபர்களை இணைப்பாக்கம் செய்து காத்திரமான புதியதொரு வீடு அரங்க அளிக்கையினை, அரங்க மாணவர்களுக்கு அளிக்கை செய்திருந்தார்.

நீண்ட காலத்திற்கு பிறகு பேரா சி.மெளனகுரு மூலம் அரங்க மாணவர்கள் முறையான கனதியான அரங்கப் படைப்பினை நுகர்ந்துள்ளனர்.

து.உருத்திரமூர்த்தியின் சிந்தையிலுருவான கதைக் களத்துக்கு நடிகர்களதும் கோரஸினதும் துணைக் கலைஞர்களினதும் கூட்டு ஒத்துழைப்பில் நெறியாளர்,மீனவர் சமூகத்தின் பண்பாடுகளை, சமூக நிலையினை அரங்கில் கொணர் ந்திருந்தார்.

நாடகாற்றுகையின் போது நெறியாளர் ஒரு சில கணத்தில் எடுத்துச்சொல்லியாகவும் இசைக்கலைஞர்களுக்கு பக்கபலமாகவும் செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது. ஆற்றுகையாளர்களது மனவுணர்வுகள் காண்பியங்களுடன் இணைந்து உடனுக்குடன் வெளிப்படும் தன்மை,நாடக கனதியை பார்ப்போருக்கு கொடுத்திருந்தது.அந்த வகையில் புதியதொரு வீடு நாடகத் தாக்கம் பலரை சென்ற டைந்துள்ளது .இத்தன்மை நெறியாளரின் ஜனநாயக ,சர்வாதிகாரப் பண்பை வெளிப்படுத்துவதாயிருந்தது.

புதியதொரு வீடு அரங்களிக்கை தனியனே உரையாடலுடன் மாத்திரம் வெளிப்படாது கோரஸினால் ஆடல் பாடல் அரங்காகவும் இசைக்கலைஞர்களினால் இசையரங்காகவும் கவிதையரங்காகவும் பேச்சோசையரங்காகவும் உயிர்த்துடிப்புடன் வாழ்ந்தது மனப்பதிவாகியது. புதியதொரு வீடு அரங்களிக்கையினை எவ் அரங்கு என பார்ப்போரே தீர்மானிக்க வேண்டியிருந்தது.

ஆடல்,பாடல்,குரலிசை, வாத்திய இசை, இசை, பாடல், கவிதை, உரையாடல், மேடைப்பொருட்கள், காட்சிப்பொருட்கள், கைப்பொருட்கள், ஒலி, ஒளி, நடனக்கோலங்கள், அசைவுகள், நடிப்பு ஆகியவை இணைந்த மொத்த அரங்காகவே புதியதொருவீடு அரங்களிக்கை இடம்பெற்றுள்ளதென்பதை அவதானிக்க முடிந்தது. பேராசிரியர் சி.மெளனகுருவின் அளிக்கைகள் முழுமை அரங்குகளாக( Total Theatre) தொழிற்படுகின்றது. புதியதொரு வீடு நாடக நெறிப்படுத்தல், இளந்தலை முறையினருக்கு காத்திரமான படைப்பு சார்ந்து புதியதொரு திருப்புமுனையினை கொடுத்துள்ளது.

இன்றைய நவீன இயந்திரயுகத்தில் எடுத்ததுக்கெல்லாம் தற்கொலை என்று உயிரை மாயக்காது மயிலி ,மாயன்,மையுண்ட நெடுங் கண்ணாத்தை,மாசிலன் போன்று வாழ்வில் ஏனையோரால் பல சவால்கள் நேர்ந்தாலும் அச்சவால்களை எதிர்த்து போராடுபவர்களாக வாழ்வை துணிந்து ஏற்பவர்களாக இருக்க வேண்டும் என்பதை புதியதொரு வீடு உணர்த்தி நிற்கின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More