இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் வெயன் ரூனி வட அமெரிக்காவின் டிசி யுனைடெட் கழகத்துடன் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரூனி இங்கிலாந்து அணிக்காகவும், பிரிமீயர் லீக்கில் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும் அதிக கோலகளை அடித்த வீரர் என்ற சாதனைக்குரியவர் ஆவார்.
2002 – 2004-ம் ஆண்டு வரை எவர்டன் அணிக்காக விளையாடிய ரூனி அதன்பின் 2017 வரை சுமார் 13 வருடங்கள் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிய பின் கடந்த பருவகாலத்தில் எவர்டனுக்கு திரும்பினார். இந்நிலையில் அமெரிக்காவில் நடத்தப்படும் மேஜர் லீக் சோசருக்கு செல்லும் ரூனி இந்த தொடரில் இடம்பிடித்துள்ள டிசி யுனைடெட் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
32 வயதாகும் ரூனி மன்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 393 போட்டிகளில் விளையாடி 183 கோல்கள் அடித்துள்ளதுடன் இங்கிலாந்து அணிக்காக 119 போட்டிகளில் விளையாடி 53 கோல் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது