மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இந்தத் தீ நள்ளிரவு 1 மணி அளவில் முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தீயினால் பங்களாவை சுற்றி உள்ள சவுக்கு மரங்கள் முற்றிலும் எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பங்களாவை சுற்றி சுமார் 200 ஏக்கர் பரப்பளவு காணி வெற்றிடமதாக உள்ள நிலையில் அங்கு அதிக அளவு சவுக்கு மரங்கள், புற்கள் காணப்படுகின்ற நிலையில 10-க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் மற்றும் 5-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் அங்கிரு இருந்த புற்கள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளதனையடுத்து அங்கிருந்த சவுக்கு மரங்களும் தீப்பிடித்து எரிந்தன.
தகவல் அறிந்ததும் 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சென்று சுமார் 6 மணி நேரம் கடுமையான போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
எனினும் பங்களாவை சுற்றி பல ஏக்கர் பரப்பளவில் இருந்த ஏராளமான சவுக்கு மரங்கள் முற்றிலும் எரிந்து அழிவடைந்துள்ள போதிலும் தீ பங்களாவிற்கு பரவவில்லை என்பததனால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புதர்களில் தீப்பிடித்ததால் வெப்பம் தாங்காமல் அங்கு பதுங்கி இருந்த ஏராளமான பாம்புகள் படையெடுத்து வெளியே வந்தன. எனினும் காய்ந்த புற்களுக்கு யாரேனும் தீ வைத்தனரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.