குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மாவட்டம் புதுக்குடியிருப்பு கிராமத்தில் பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமான ‘நாரா பாடு’ பகுதியில் சட்டவிரோதமாக கற்றாழை அகழ்வில் ஈடுபட்ட இருவர் இன்று (29) வெள்ளிக்கிழமை காலை மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை 9 மணியளவில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விற்பனைக்காக கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் காணப்பட்ட 253 கிலோ கற்றாழை செடிகளும் ஒரு வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சில பிரதேசங்களில் வியாபார நோக்கத்திற்காக கற்றாழை செடிகள் சட்ட விறோதமான முறையில் அகழ்வு செய்யப்பட்டு வருகின்றது.
இவ் கற்றாழை செடியானது பல மருத்துவ குணத்தையும் நன்மைகளையும் கொண்டதுடன் இதன் மூலம் பல விலையுயர்ந்த பாவனைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதனால் மன்னார் எருக்கலம்பிட்டி , சாந்திபுரம், தாராபுரம், போன்ற கிராமங்களில் இருந்தும் இவ்வாறான செடிகள் மற்றும் வளங்கள் வியாபார நோக்கத்திற்காக பிடுங்கப்பட்டு வெளி பிரதேசங்களுக்கும் வெளிநாடுகளிற்கும் அனுப்பப்பட்டு வருகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.