அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 16 பேர் மற்றும் கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டி.பி.ஏகநாயக்க தெரிவித்தார். இச் சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினுடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், பொது எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் திங்கட்கிழமை சந்திக்கும் போது, எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் குறித்தும், கூட்டு எதிர் கட்சியுடனான இணைவு பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளது. தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து செயற்பட விருப்பமின்னை மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளில் உடன்பாடின்மை போன்றவற்றின் காரணமாகவே அரசாங்கத்திலிருந்து விலகி கூட்டு எதிர்கட்சியுடன் பயணிக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதோடு, அவர்களுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பவுள்ளது.
இதன் போது கூட்டு எதிர்கட்சியினரின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள கூடியதாக இருக்கும் பட்சத்தில் அதற்கு இணங்குவதோடு, தொடர்ச்சியாக அவர்களுடன் இணைந்து செயற்படவும் தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டி.பி.ஏகநாயக்க தெரிவித்தார்.