காவிரி மேலாண்மை ஆணையகம், காவிரி நீர்ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அரசு சார்பில் இன்று நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையகம், ஒழுங்காற்றுக்குழுவில் தங்களிடம் ஆலோசிக்காமல் உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்ததை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட உள்ளது.
பல்வேறு தாமதங்களுக்குப் பின், மத்திய அரசு இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு, காவிரி மேம்பாட்டு ஆணையகம், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழுவை அமைத்திருந்தது. தமிழகம்,கேரளம்,புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தங்களின் உறுப்பினர்களை அறிவித்த நிலையில், கர்நாடகம் மட்டும் அறிவிக்கவில்லை என்பதனால் மத்திய அரசு தாமாகவே கர்நாடக மாநிலத்துக்கு உறுப்பினர்களை நியமித்திருந்தது.
காவிரி மேலாண்மை ஆணையகத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2ம் திகதி டெல்லியில் நடைபெற உள்ளநிலையில், இன்று முதல்வர் எச்.டி. குமாரசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்ற போதே தங்களைக் கலந்து ஆலோசிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக்குழுவுக்கு உறுப்பினர்களை மத்தியஅரசு நியமித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் வழக்கு தொடர்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது