வறுமை தாண்டவமாடுகிறது – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. கல்வியில் பின்தங்கிய இந்த மாவட்டம் வறுமையில் முன்னணியில் இருக்கிறது. இந்த நிலைக்கு அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்குகளும் ஒரு காரணம் என்று பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.
யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகளை எட்டும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட மாங்குளம், பனிக்கன்குளம், திருமுறிகண்டி முதலிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் இதுவரையில் அரசின் வீட்டுத்திட்டற்கு உள்வாங்கப்படாத நிலையில் தற்காலிக வீடுகளிலேயே வாழ்ந்து வருகின்றன.
யுத்தம் முடிவடைந்து மீள்குடியேறும்போது அமைக்கப்பட்ட இந்த தற்காலிக வீடுகள் தற்போது ஒன்பது ஆண்டுகள் ஆகிய நிலையில் முற்றிலும் வசிக்க முடியாத நிலையில் உள்ளன. இதனால் தாம் பெரும் துன்பங்களை எதிர்கொள்ள நேரிடுவதாக இந்தப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
வீட்டுத்திட்ட புள்ளியிடலினால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் தம்முடைய நிலையை கருத்தில் எடுத்து புதிய திட்டத்தின் அடிப்படையில் வீடுகளை அமைத்து தர வேண்டும் என்று கோருகின்றனர். பிள்ளைகளின் கல்வி, அன்றாட வாழ்கை என்பன பெரும் துயரத்தில் நீள்வதாக கூறும் மக்கள் மழைகாலங்களில் நினைத்துப் பார்க்க முடியாத துன்பத்திற்கு ஆளாவதாகவும் இந்த மக்கள் மேலும் கூறுகின்றனர்.