காவிரி மேலாண்மை ஆணையகத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில், இந்த மாதம் 30 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுமாறு தமிழகம் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரையே பெரிதும் நம்பி இருக்கும் சூழ்நிலையில், ஆண்டுதோறும் கர்நாடக மாநிலத்தில் இருந்து உரிய தண்ணீரை பெறுவதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.
தமிழக அரசு மேற்கொண்ட தீவிர சட்டப் போராட்டத்தின் காரணமாக உச்சநீதிமன்றின் உத்தரவின் பேரில், காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் காவிரி மேலாண்மை ஆணையகத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையகத்தின் முதல் கூட்டம், டெல்லியில் இன்று நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. குறிப்பாக, ஆணையகத்தின் விதிகள், செயல்பாட்டு முறைகள், கூட்டங்களுக்கான நடைமுறைகள் போன்றவை பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும் இன்றைய கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.