மெக்சிகோவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் அன்டரஸ் மனுவேல் லோபஸ் ஓபரடோ (Andres Manuel Lopez Obrado) 53 சதவிகித வாக்குகள் பெற்று வரலாற்று வெற்றி பெற்றுள்ளார். மெக்சிகோவில் ஜனாதிபதி , பாராளுமன்றம் மற்றும் 3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கான நேற்றையதினம் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய ஜனாதிபதியான பெனா நெய்டோ மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளலையில் அவரது ஐஆர்பி கட்சி தோல்வியை தழுவும் என கருத்து கணிப்புகள் வெளியாகியிருந்தன.
லோபஸ் ஓபரடோ இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் 53 சதவிகித வாக்குகள் பெற்று முன்னலை வகிக்கின்றார். இந்தநிலையில் மெக்சிகோவை கடந்த ஒரு நூற்றாண்டாக ஆண்டுள்ள இரு கட்சிகளை தோற்கடித்தவர் என்ற வரலாற்று சாதனையை லோபஸ் ஓபரடோ படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல், வறுமை, போதை மாபியா ஆகியவற்றை ஒழிப்பதே தனது முதல் இலக்கு என தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதியில் அளித்திருந்த லோபஸ் ஓபரடோ அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையை கடுமையாக விமர்சித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது