நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக இயங்குவது தொடர்பாக, 17 விதிமுறைகள் அடங்கிய பரிந்துரையை வழங்கியது. அதில் அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் கொண்ட கட்டமைப்பை 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக இருந்தது.
அந்த 5 ஆண்டு கால அவகாசம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், மேலும் 5 ஆண்டு கால அவகாச நீட்டிப்பு வழங்க வேண்டும் எனக் கோரி இந்திய அணுமின்சக்தி கழகம் கடந்த உச்சநீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்து. அதேவேளை அணுக்கழிவுகளை உலைக்கு உள்ளேயே சேகரித்து வைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போதிய வசதிகளை கட்டி முடிக்கும் வரை கூடங்குளம் உலைகளில் இருந்து மேலும் கழிவுகள் உண்டாகாமல் இருக்கும் வகையில், இந்திய அணுமின்சக்தி கழகத்தின் கோரிக்கையை நிராகரித்து அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட வேண்டும் எனக் கோரி பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்றில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிடவேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
அத்துடன் அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு எதிர்வரும் 2022-ம் ஆண்டு ஏப்ரல் 30ம் திகதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது