1970களில் தேவாலயச் சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய பாதிரியார் ஒருவரின் குற்றத்தை மூடி மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட கத்தோலிக்கப் பேராயர் ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் 12 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிலிப் வில்சன் என்ற அந்தப் பேராயர் குற்றவாளி என அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்று கடந்த மாதம் தீர்ப்பளித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . அவர் சிறைக்கு செல்லாது 12 மாதமும் வீட்டுச் சிறையில் வைக்கப்படலாம் எனவும் ஆறு மாதத்துக்குப் பிறகு அவர் பரோல் பெற முடியும் என எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டில் இதுவரை தண்டனை பெற்ற கத்தோலிக்க மத குருமார்களில் இவரே மிக உயர்ந்த பதவியை வகிப்பவர் ஆவார்.
நியூ சவுத்வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் ஜேம்ஸ் பட்ரிக் ப்லெட்சர் என்பவர் தேவாலயத்தில் பணியாற்றிய சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றத்தைப் பற்றி காவல்துறையினரிடம் தெரிவிக்கத் தவறினார் என பிலிப் வில்சன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குற்றவாளி என்று தீர்ப்பு வந்த பின்னர் அவர் பேராயர் பதவியிலிருந்து அவர் விலகிக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களை பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ப்ளெட்சர் இது போன்ற ஒன்பது குற்றச்சாட்டுகளில் 2004ம் ஆண்டு தண்டனை பெற்று இரண்டாண்டுகளுக்குப் பின்னர் சிறையிலேயே உயிரிழந்து விட்டார்.
ப்ளெட்சரின் செயல்கள் பற்றித் தமக்குத் தெரியாது என்று விசாரணையின்போது வில்சன் மறுத்தார் போதும் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவர் குற்றம் நடந்து ஐந்தாண்டுகளுக்குப் பின்னர். இது பற்றி தாம் பிலிப் வில்சனிடம் தெரிவித்ததாக விசாரணையில் தெரிவித்தாhர் என்பது குறிப்பிடத்தக்கது