வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன்
யுத்தத்திற்கு முன்னர் எமது முன்னைய தலைவர்கள் இருந்த பொழுது எவ்வாறு எங்களுடைய சிறார்கள் மற்றும் பெண்கள் நடத்தப்பட்டார்கள் அவர்களுக்கு இருந்த பாதுகாப்பு எவ்வளவு என்பதை நாம் அனைவரும் அறிவோம்.ஆனால் இன்று அந்த பாதுகாப்பு இல்லை.தொடர்ச்சியாக யாழ் மாவட்டத்தில் சிறுவர்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள்.
பாலியல் துஸ்பிரையோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த றெஜினா என்ற பள்ளி மாணவியின் படுகொலையை கண்டித்தும் நாடு முழுதும் இடம் பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்கொடுமைகளை கண்டித்தும் இன்று செவ்வாய்க்கிழமை (3) காலை 10 மணியளவில் -மன்னார் முருங்கனில் அமைதி பேரணி இடம் பெற்றது.
மன்னார் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் முருங்கன் வைத்தியசாலைக்கு முன் குறித்த பேரணி ஆரம்பமானது.
குறித்த பேரணியில் அருட்தந்தையர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புக்கள், அப்பிரதேச வர்த்தகர்கள், பெண்கள் அமைப்புக்கள், நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி,பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து முருங்கன் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவு வழங்கினர். குறித்த பேரணி பிரதான வீதியூடாக சென்று முருங்கன் பேருந்து தரிப்பிடத்தை சென்றடைந்தது.
அதனைத்தொடர்ந்து அங்கு கண்டன உரைகள் இடம் பெற்றதோடு ஏற்பாட்டுக்குழுவினரினால் கோரிக்கை அடங்கிய மகஜர் உரிய தரப்பினருக்கு கையளிக்கும் வகையில் வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.
அங்கு கருத்து வெளியிட்ட அவர், மாணவச் செல்வங்களை நாளைய தலைவர்கள் தலைவிகளாக நல்ல முறையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற பொறுப்பு எம் எல்லோரிடமும் இருக்கின்றது. குறிப்பாக பொது அமைப்பினர், பெற்றோர்கள் இவ்விடையங்களில் விழிர்ப்புடன் இல்லை என்றால் இன்னும் எத்தனையோ சிறார்களை நாம் பலி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
தற்போதைய கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் கலாச்சார சீர் கேடுகளும்,எங்களுடைய சிறுவர்களின் மரணமும் நிகழ்வதற்கு முக்கிய காரணம் வெளிநாடுகளில் உள்ள எங்களுடைய உறவுகள் தங்களுடைய சகோதரம் மற்றும் உறவுகளுக்கு தேவைக்கு அதிகமாக பணம் அனுப்புகின்றார்கள்.
அவ்வாறான சம்பவங்களே இன்றைய கால கட்டத்தில் குறித்த பிரச்சினைகளுக்க ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது.
கலாச்சாரத்தை சர்வதேசத்திற்கே எடுத்துக்காட்டிய வடமாகணம் அதுவும் யாழ் மாவட்டம் இன்று கலாச்சார சீரழிவின் உச்ச நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் நாங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கடந்த காலத்தில் நாம் இழந்த இழப்புக்களுக்கு தற்போதைய காலத்தில் இடம் பெறுகின்ற இழப்புக்கள் ஏன் எமது முன்னையவர்கள் கடந்த காலத்தில் அவ்வளவு இழப்புக்களை கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து மாற்றமாகிச் சென்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களின் செயற்பாட்டை நான் வரவேற்கின்றேன். கடந்த காலங்களில் குற்றச் செயல்கள் இடம் பெறாமல் இருந்ததுக்கு காரணம் தண்டனைகள் அதிகமாக இருந்தவையே காரணம்.
ஆகவே நியாயமான தண்டணைகளுக்கு அப்பால் குற்றாளிகளின் குற்றம் நிருபிக்கப்படுமாக இருந்தால் அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.நீதித்துரை சுதந்திரமாக இயங்க வேண்டும். இயங்கிக்கொண்டிருக்கின்றது.
இவ்வாறான குற்றச் செயல்களுக்கு அதி உச்ச தண்டனை வழங்கப்படுமாக இருந்தால் எமது பிள்ளைகளை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். இவ்வாறான சம்பவங்களுக்கு விரைவாக தீர்ப்பினை வழங்க வேண்டும்.
காலம் நீடித்து இழுத்தடிப்பு செய்யும் சந்தர்ப்பத்தில் இன்னும் எத்தனையோ சிறுவர்களையும்,பெண்களையும் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.என அவர் மேலும் தெரிவித்தார்.