விஜயகலாவின் புலிக் கருத்து குறித்து விசாரணை நடத்தப்படும்…
சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலை புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் யாழ்ப்பாணத்தில், நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியதையடுத்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகி உள்ளன. இந்நிலையில் இன்று பாராளுமன்றம் கூடிய போது விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்தினால் பாராளுமன்றில் பெரும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளை நடத்திச் செல்வதற்கு தடை ஏற்பட்டதால் நாளை (04.07.18) காலை வரையில் பாராளுமன்ற அமர்வை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
மகிந்தவின் தேவைக்காக விஜயகலா புலியை அழைத்திருக்கலாம்…
தமிழ் மக்களின் விடுதலைக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் கூறிய கருத்தை கண்டிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று காலை கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல விடயங்களை ஆற்றியுள்ளதாகவும், எனினும் தமிழ் மக்களுக்காக விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்று கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுவதாகவும், நியுயோர்க் டைம்ஸ் சர்ச்சையை மறக்கடிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷவின் தேவைக்கு ஏற்ப விஜயகலா மகேஷ்வரன் இவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இணைந்து இது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும், பதவியை கருத்திற் கொள்ளாமல் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
விஜயகலா மகேஷ்வரனை பதவி நீக்க வேண்டும்..
சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனை பதவி விலக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி மற்றும் எதிரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விஜயகலா மகேஸ்வரனை கைதுசெய்யுமாறு, காவற்துறையில் முறைப்பாடு..
சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைதுசெய்யுமாறு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. சிங்கள ராவய அமைப்பினால் செய்யப்பட்டள்ள அந்த முறைப்பாட்டில், “ தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் வைத்து உரையாற்றியுள்ளார். ஆகையால், அவரை கைதுசெய்து, சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000000000000000000