குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திடீரென உடல் நிலைபாதிக்கப்பட்டு உள்ளார் என அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழில். உள்ள தனது இல்லத்தில் தங்கியுள்ள இராஜாங்க அமைச்சர் இன்று செவ்வாய்க்கிழமை திடீரென உடல் நல பாதிப்புக்கு உள்ளாகியதனையடுத்து அருகில் உள்ள தனியார் வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் இன்று மதியம் வீடு திரும்பியுள்ளார். தற்போது வீட்டில் ஓய்வு பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ‘ விடுதலை புலிகள் மீள உருவாக வேண்டும் ‘ என உரையாற்றி இருந்தார்.
அவரது அந்த உரையை அடுத்து நாடு முழுவது சர்ச்சைகள் எழும்பியுள்ளநிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றிலும் கடும் குழப்பம் ஏற்பட்டதனால் நாடாளுமன்றம் நாளைய தினம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் குறித்த சர்ச்சைக்கு உரிய உரை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என பிரதமர் மற்றும் சபா நாயகர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் முகமாக உரையாற்றினார் எனவும் , இராஜாங்க அமைச்சரை உடனடியாக கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
இந்நிலையிலையே இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திடீரென உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.