பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் வன்முறையில் ஈடுபடுவோரை மாநில அரசுகளே கண்காணிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதல் சம்பவம் தொடர்கின்ற நிலையில் இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை தடுத்த நிறுத்த அரசுகளுக்கு உத்தரவிடுமாறு மகாத்மா காந்தியின் கொள்ளு பேரனான பத்திரிக்கையாளர் தூஷார் காந்தி உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ம் திகதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை தடுக்க மாவட்டம் தோறும் உயரதிகாரிகளை சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து கண்காணிக்குமாறு உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றின் இந்த உத்தரவை ராஜஸ்தான், அரியானா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநில அரசுகள் பின்பற்றவில்லை. இந்நிலையில், மாநில அரசுகள் கண்காணிக்கவில்லை என தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றில் நடைபெற்ற போது இந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கண்காணிப்பது ஒவ்வொரு மாநிலத்தின் பொறுப்பாகும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.