குளோபல் தமிழ்ச்செய்தியாளர்….
மிஹின் லங்கா விமான சேவையில் பணியாற்றிய தான் உட்பட 100க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 9 மாதங்கள் சம்பளம் வழங்கப்படவில்லை என அந்த விமான நிறுவனத்தின் விமான நிலைய முன்னாள் நடவடிக்கை முகாமையாளர் இங்கிராட் கேத்தலீன் குருகே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன், ஸ்ரீலங்கன் கேட்ரீங் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளில் நடந்த ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அந்த 9 மாதங்கள் அனைவரும் சம்பளம் பெறாது பணியாற்றினோம். எனினும் சம்பள பாக்கியையும் விமான நிறுவனம் இதுவரை செலுத்தவில்லை. மிஹின் லங்கா நிறுவனத்தின் எதிர்காலம் தொடர்பான எதிர்பார்ப்பில் நாங்கள் சம்பளத்தை பெறாது பணியாற்றினோம்.
அந்த 9 மாதங்களில் மிஹின் லங்கா நிறுவனத்திற்கு விமானங்கள் இருக்கவில்லை. விமானங்களை வாடகைக்கு வழங்கியிருந்த நிறுவனம் தனது விமானங்களை திரும்ப பெற்றுக்கொண்டது எனவும் கேத்தலின் குருகே குறிப்பிட்டுள்ளார்.