குளோபல் தமிழ்ச்செய்தியாளர்….
இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக மாற்றி மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய அரசாங்கம் இந்த வருட இறுதிக்குள் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
மத்தள விமான நிலையத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்திய முதலீட்டாளர்கள் சிலர், விமான நிலையத்தை பார்வையிட வந்துள்ளனர். சர்வதேசத்திடம் அடிப்பணிந்துள்ள அரசாங்கம், மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய உள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் என்பன போர் ரீதியான முக்கியமான கேந்திர நிலையங்கள். மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட பின்னர், இலங்கை சர்வதேச புலனாய்வு சேவைகளின் அதிகார போட்டிக்குள் சிக்குவதை தடுக்க முடியாது.
மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கினால், இலங்கையில் தற்போதுள்ள அமைதியான சூழல் சீர்குலைந்து நாடு பாதுகாப்பற்ற நிலைமைக்கு செல்வதை தவிர்க்க முடியாது எனவும் முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.