குளோபல் தமிழ்ச்செய்தியாளர்….
ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தியுள்ள நிதி தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்கும் பொறுப்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக இடமளிக்க போவதில்லை. நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை பாதுகாக்கப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கூறியிருந்தமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
நாம் எப்போது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்போம். விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் ஏற்படுத்தும் தேவை எமக்கில்லை. அந்த அடிப்படையிலும் அந்த வரையறைக்குள் இருந்தும் நாம் எதிர்காலத்திலும் செயற்படுவோம்.
நாட்டின் ஒருமைப்பாட்டையும் பௌத்த மத்திற்கான முன்னுரிமையையும் பாதுகாத்து நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வின் மூலம் அடிப்படை உரிமை பிரச்சினையையும் அதிகார பரவலாக்கல் தொடர்பான பிரச்சினையையும் தீர்க்க வேண்டியுள்ளது. காணிகளை மீள கையளிப்பது தொடர்பாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்யும் தேவையுள்ளது. அபிவிருத்தியில்லாமல் முன்னேற முடியாது. எனவும் தெரிவித்துள்ளார்.