ஈழத்தில் 13ஆம் நூற்றாண்டில் அக்கராயன் பிரதேசத்தை ஆட்சி செய்த அக்கிராசன் என்ற குறுநில மன்னனுக்கு இன்று சிலை திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தியிலேயே இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. அக்கிராசன் மன்னன் கிளிநொச்சியின் அக்கராயன் பிரதேசத்தை ஆட்சி செய்துள்ளதுடன் அக்கராயன் குளத்தையும் கட்டுவித்துள்ளார். இவரது பெயரால் அழைக்கப்பட்ட இந்தப் பிரதேசம் அக்கிராசன் என்பது மருவி அக்கராயன் என காலப்போக்கில் அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா இச் சிலையினை திறந்து வைத்தார்.
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மற்றும் பிரதேச சபையின் நிதியில் இந்த பிரமிப்பை தரும் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.