Home இலங்கை அதிகரிக்கும் வன்முறைகள் – பி.மாணிக்கவாசகம்

அதிகரிக்கும் வன்முறைகள் – பி.மாணிக்கவாசகம்

by admin

நாட்டில் வன்முறைகளும், காடைத்தனங்களும், அடாவடியான செயற்பாடுகளும் அதிகரித்திருப்பதாகப் பலரும் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, சாதாரண மக்களுடைய நாளாந்த பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதே, இதற்குக் காரணம்.

சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாமல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொலிசாரின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றதே என்ற ஒரு குரலும் எழுந்திருக்கின்றது. நல்லாட்சி புரிகின்ற அரசாங்கத்தின் கீழ் இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்கின்றதா என்ற ஏக்கம் கலந்த கேள்வி வியப்போடு வினவப்படுகின்றது. சட்டம் ஒழுங்கு சீராக நடைமுறைப்படுத்தப்படுவதே உண்மையில் நல்லாட்சி அரசாங்கத்திற்குரிய இலட்சணமாகும். அந்த வகையில் தற்போதுள்ள நிலைமையை நோக்குகையில் நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் பெயரளவிலேயே இருக்கின்றது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கின்றது.

பாதாள உலகக் கோஸ்டிகளினதும், போதை வஸ்து கடத்துபவர்கள், போதைப் பொருள் விற்பனை செய்பவர்களினதும் செயற்பாடுகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்திருப்பதே வன்முறைகள் தீவிரமாகத் தலைதூக்குவதற்கான காரணம் என கூறப்படுகின்றது. பாதாள உலகக் கோஸ்டிகளே இன்று தீர்மானிக்கும் சக்தியாக மாறி இருக்கின்றன என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமா சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் யுத்த மோதல்கள் இடம்பெற்றன. அந்த யுத்தச் சூழலிலும்கூட, ஆசியாவிலேயே இலங்கைதான் பாதுகாப்பான நாடாக இருந்தது. அக்காலப்பகுதியில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் சுற்றுலாவுக்காக இங்கு அச்சமின்றி வந்து போனதாகத் தெரிவித்துள்ள அவர் இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருப்பதாகக் கூறியுள்ளார்.

தலைகீழாக மாறியுள்ள நிலையில் பாதாள உலக கோஸ்டியினரே நாட்டின் நிலைமைகளைத் தீர்மானிப்பவர்களாக உள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ள டலஸ் அழகப்பெருமா, இந்த நிலைமையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு சிறந்த தலைவர் ஒருவர் நாட்டுக்கு அவசியம் என தெரிவித்துள்ளார். நாட்டில் ஆளுமையுள்ள ஒரு நல்ல தலைவர் இல்லை என்பதே அவருடைய நிலைப்பாடு என்பது புலனாகின்றது.

சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு நிலைமையை சீர் செய்வதற்கு மகிந்த ராஜபக்ச போன்ற ஆளுமையுள்ள தலைவரே அவசியம் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையிலேயே, அவருடைய கூற்று அமைந்திருக்கின்றது.

மகிந்த ராஜபக்ச காலத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருந்தது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அதேவேளை, நல்லாட்சியில் சட்டம் ஒழுங்கு சீராக நிலைநிறுத்தப்படவில்லை என்பதை மறுக்க முடியாது. பொது பாதுகாப்பையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு சட்டம் ஒழுங்கு இறுக்கமாக பேணப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அந்தப் பொறுப்பில் இருந்து நல்லாட்சி அரசாங்கம் தவறி வருகின்றது என்று சாதாரண மக்கள் கருதும் அளவிலேயே நிலைமைகள் சென்று கொண்டிருக்கின்றன.

குற்றச் செயல்களும் வன்முறைகளும் கட்டுப்பாட்டை மீறி இடம்பெறும்பொழுது, நாட்டின் நிர்வாகம் சீரழிய நேரிடும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நல்லாட்சி என்பது முதலில், ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டுவதிலேயே தங்கியிருக்கின்றது. வன்முறைகளும், சமூகவிரோதச் செயற்பாடுகளுமற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதிலேயே ஆட்சி ஒன்றின் ஆற்றலும் திறமையும் வெளிப்படுகின்றது.

எதேச்சதிகாரத்தையும் ஊழல் நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக உறுதியளித்து அதிகாரத்துக்கு வந்த ஆட்சியாளர்களினால், நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் சீராக நடைமுறைப்படுத்துவதற்கு முடியாமல் போயிருப்பது விரும்பத்தக்கதல்ல. அது வருந்தத் தக்கது.

மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தின் எச்சரிக்கை

அதிகரித்துச் செல்கின்ற வன்முறைகளும், குற்றச் செயல்களும் மீண்டும் ஓர் இருண்ட யுகத்தை நோக்கி நாட்டை இழுத்துச் செல்வதற்கே வழி வகுக்கும் என்று, மாற்றுக் கொள்கைக்கான நிலையம் அச்சம் கலந்த எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. குறிப்பாக பொலிசாரின் பாதுகாப்பில் இருந்த சந்தேக நபர் ஒருவர் கைக்குண்டு தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் செல்ல முற்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்ட அதே நேரத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டது போன்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்யவும் அதிகாரிகளால் இயலாமல் போயிருப்பதை அந்த நிலையம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகளுக்கான பாதுகாப்பையும், சட்ட நடைமுறைகளிலான பாதுகாப்பையும் முழுமையாகப் புறக்கணித்து, அதிகப்படியான அதிகார சக்தியையும், சட்ட முறைமைகளை மீறிய செயற்பாடுகளையும் சாதாரணமாக அனுமதிக்கின்ற இத்தகைய சம்பவங்கள் மற்றவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றன. எனவே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறும்பட்சத்தில், தண்டனைகளில் இருந்து தப்பிச்செல்கின்ற கலாசாரம் செழித்தோங்கி, கட்டுக்கடங்காத வன்முறை சூழலுக்குள் சமூகம் தள்ளப்படும் நிலைகுறித்து அச்சம் கொள்ள வேண்டியுள்ளது என்று மாற்றுக்கொள்கைக்கான நிலையம் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியுள்ளது.

பொது பாதுகாப்புக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் பொறுப்பாக இருந்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதே பொலிசாரின் கடமையாகும். சட்டமும் ஒழுங்கும் எல்லோருக்கும் பொதுவானது. அதனை நடைமுறைப்படுத்துவது ஆட்சி நிர்வாகத்தின் முக்கிய அடிப்படை அம்சமாகும். சட்டத்தையும் ஒழுங்கையும் சீராகக் கடைப்பிடிக்காமல், குற்றச் செயல்களிலும் வன்முறைகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது அதிகப்படியாக அதிகாரத்தையும். அதிகார பலத்தையும் பிரயோகிப்பதனால் விரும்பத்தகாத எதிர்வினைச் சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க முடியாமல் போகும். அத்தகைய நிலைமைகளில் வன்முறையாளர்களின் கை ஓங்குவதற்கும், அடாவடித்தனம் ஆட்சிபுரிவதற்கும் வழியேற்படுத்தியதாகவே முடியும்.

சட்டத்தின் பிடியாகக் கருதப்படுகின்ற பொலிசாரின் பாதுகாப்பில் இருக்கும்போது சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல முற்பட்டதாகச் சொல்லப்பட்ட பலர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் பல கடந்த காலங்களில் இடம்பெற்றதையும், அவற்றில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக கடந்த ஆட்சியில் நடவடிக்கைகள் எடுக்கப்படாதையும் அந்த அறிக்கை நினைவுபடுத்தியுள்ளது. இது குறித்து 2017 ஆம் ஆண்டின் இலங்கைக்கான அனைத்துலக பருவகால மீளாய்வின்போது இணைந்த சிவில் சமூகத்தினால் கையளிக்கப்பட்ட அறிக்கை உட்பட்ட பல்வேறு அறிக்கைகளில் சுட்டிக்காட்டியிருந்ததையும் மாற்றுக் கொள்கைக்கான நிலையம் குறித்துக் காட்டியிருக்கின்றது.

கடந்த ஆட்சியிலிருந்ததிலும் பார்க்க புதிய ஆட்சியில் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அத்தகைய சட்டமீறல் சம்பவங்கள் தொடர்கின்றன என்பதையும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நிறையவே செயற்பட வேண்டி இருக்கின்றது என்பதையும், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் என்பதையும் மாற்றுக்கொள்கைக்கான நிலையம் தனது அறிக்கையில் குறித்துக் காட்டியிருக்கின்றது.

இனவாதம் மதவாதம் சார்ந்த வன்முறைகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ள ஒரு சூழலில், பாதாள உலகக் குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சந்தர்ப்பத்திலேயே பொலிஸ் பாதுகாப்பில் இருந்த ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். அதிகாரிகள் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருப்பதை வெளிப்படுத்துவதற்கே இந்த சம்பவம் உதவியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், பாதுகாப்பு அமைச்சர் என்றும், முப்படைகளின் தளபதி என்ற ரீதியிலும் நாட்டின் பாதுகாப்பும் பொதுமக்களின் பாதுகாப்பும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பொறுப்பில் இருக்கின்ற ஒரு நிலையில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட முடியாத கையாலாகாத நிலைமைக்கு அரசாங்கம் ஆளாகியிருக்கின்றதோ என்ற எண்ணத்தையும் தூண்டியிருக்கின்றது என்றே கூற வேண்டியுள்ளது.

சர்வாதிகாரியாகிய ஹிட்லரின் பாணியில் நாட்டை ஆட்சி செய்ய முன்வருமாறு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பௌத்த மத உயர் பீடத்தைச் சேர்ந்த முக்கிய மதத் தலைவர் ஒருவர் இந்த சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுத்துள்ளமை, தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் சிவில் உரிமைகள் உதாசீனம் செய்யப்பட்டு, பொது பாதுகாப்பு அலட்சியப்படுத்தப்பட்ட இருண்ட காலத்தை, அச்சத்தில் உறையும் வகையில் நினைவுகூரச் செய்திருப்பதாகவும் மாற்றுக் கொள்கைக்கான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

வடமாகாணத்தின் அச்சம் சூழ்ந்த நிலைமை

நாட்டின் தென்பகுதி மட்டுமல்லாமல், வடக்கிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலைமையே காணப்படுகின்றது. ஒப்பீட்டளவில் வடக்கில் குறிப்பாக யாழ் குடாநாட்டில் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் மிகமோசமாகத் தலையெடுத்திருக்கின்றன. வீடுகளை உடைத்தும், வீடுகளில் இருப்பவர்களை மோசமாகத் தாக்கியும் கொள்ளையில் ஈடுபடுகின்ற சம்பவங்களும், வாள்வெட்டு குழுக்களின் அடாவடித்தனமும், ஏழு வயது பாலகி என்றும் ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட முதிய பெண்மணி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதும், கொலை செய்வதுமான காட்டுமிராண்டித்தனமான சம்பவங்களும் அங்கு இடம்பெற்றிருக்கின்றன.

வாள்வெட்டுக் குழுவினர் வாள்களுடன் மோதிக் கொள்வதும், பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளிலும் வன்முறைகளில் ஈடுபடுவதும் யாழ் குடாநாட்டில் சாதாரண நிகழ்வுகளாக இடம்பெறத் தொடங்கியிருக்கின்றது. தேசிய பாதுகாப்பை முன்னிட்டு, இராணுவத்தினரும், இராணுவ முகாம்களும் அதிக அளவில் நிலைநிறுத்தப்பட்டு, முழத்துக்கு முழம் படையினர் காணப்படுகின்றார்கள் என்று கூறும் அளவுக்கு, இராணுவம் நிறைந்துள்ள சூழலிலேயே சட்டமும் ஒழுங்கும் அங்கு மிக மோசமாக சீர்குலைந்துள்ளன.

இராணுவத்திற்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினரும். பொலிசாரும் யாழ் குடாநாட்டில் கடமைக்காக நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். பொலிசாரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகளும், வீதிப் போக்குவரத்து பொலிசாரின் கண்காணிப்பு மற்றும் வீதி ஒழுங்கு செயற்பாடுகளும் குறைவி;ன்றி அங்கு மேற்கொள்ளப்படுகின்றன. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்காக அவசர ஆபத்தான வேளைகளில் பொலிசாருடன் இலகுவாகத் தொடர்பு கொண்டு அவர்களுடைய சேவையையும் உதவியையும் துரிதமாகப் பெற்றுக் கொள்வதற்கான 119 என்ற தொலைபேசி இலக்க அழைப்பைக் கொண்ட பொலிசாரின் அவசர சேவை வசதியும் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

படைத்தரப்பு உள்ளிட்ட போதிய ஆளணியும், பொலிஸ் நிலையங்களும் பொலிசாரும் இருந்தும்கூட யாழ் குடாநாட்டில் வன்முறைகளும் சமூக விரோதச் செயற்பாடுகளும் தலைதூக்கி இருப்பதானது, அரச நிர்வாக சக்திக்கும் மேம்பட்ட ஒரு சக்தி, இந்த குற்றச் செயல்களுக்குப் பின்னால் இருந்து செயற்படுகின்றதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் வன்முறைகளிலும் கட்டுக்கடங்காமல் குற்றச் செயல்களிலும் ஈடுபடுபவர்களை சட்டமும் நீதியும் கண்டும் காணாமல் பாராமுகமாக இருப்பதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளதோ என்று சிந்திக்கவும் தூண்டி இருக்கின்றது.

வாள்வெட்டு குழுக்களின் அட்டகாசமும், கொள்ளையர்களின் அடாவடித்தனங்களும், துர் நடத்தையாளர்களின் சமூக விரோதச் செயற்பாடுகளும் யாழ் குடாநாட்டுக்குப் புதியதல்ல. இந்த வன்முறைகளும் சமூகவிரோதச் செயற்பாடுகளும் அண்மைய வருடங்களில் அதிகரித்திருந்த போது அவற்றைக் கட்டுப்படுத்துவதில் பொலிசாருக்குத் தூண்டுதலாகவும், உறுதுணையாகவும் நீதித்துறை செயற்பட்டிருந்தது. இறுக்கமான சட்ட நடவடிக்கைகள் சார்ந்த நடைமுறைகளை நீதிமன்றங்கள் கடைப்பிடித்ததால், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையான தண்டனை சார்ந்த நடவடிக்கைகள் தண்டனை தீர்ப்புக்கள் குறித்து அச்சமடைந்திருந்தார்கள். சட்டத்தின் பிடியில் சிக்கினால் தப்ப முடியாது என்ற நிலையில் குற்றச் செயல்களும் சமூக விரோதச் செயற்பாடுகளும் குறைந்திருந்தன.

ஆனால் நீதிபதிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் யாழ் குடாநாட்டில் ஒரு தொய்வு நிலைமை ஏற்பட்டுவிட்டதோ என்று சந்தேகிக்கத்தக்க வகையில் நிலைமைகள் படிப்படியாக மோசமடைந்திருக்கின்றன.

சுழற்சி முறையிலான குற்றச் செயல்கள்……

வன்முறையாளர்களும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களும் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்ற அதேவேளை, சுழிபுரத்தில் ஏழு வயதான ரெஜினா என்ற சிறுமி கடத்திச் செல்லப்பட்டு கோரமாகக் கொல்லப்பட்டு கிடந்த சம்பவத்தின்போது சம்பவ இடத்திற்குச் சென்ற நீதிபதியின் முன்னிலையில் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அங்கு கூடியிருந்தவர்கள் நடந்து கொண்ட முறையை காணொளிகளில் கண்ட பலரையும் முகம் சுழிக்கச் செய்திருந்தது.

கொள்ளை நோக்கத்துடன் கடத்தப்பட்ட அந்த சிறுமியை மோசமாக சித்திரவதை செய்து, கழுத்து நெரித்துக் கொன்ற குற்றவாளிகள் அந்த சிறுமியின் சடலத்தை கிணறொன்றில் வீசிச் சென்றிருந்தார்கள். இந்தச் சம்பவம் மிகக் கொடூரமானது. மனித பண்புடைய எவரும் செய்வதற்குத் துணியாத வகையில் இந்தச் சம்பவம் பலரையும் உணர்ச்சி வசப்படச் செய்து, அவர்களை ஆத்திரமூட்டவே செய்யும் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் அந்த உணர்ச்சியும் ஆத்திரமும் கட்டுக்கடங்காமல் பொருத்தமில்லாத இடங்களில் வெளிப்படுவது ஆரோக்கியமானதல்ல.

அந்த சம்பவத்தில் உண்மையாக நடந்தது என்ன என்பதை சட்டரீதியான முறையில் அறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக முற்பட்ட நீதித்துறை மற்றும் சட்டத்துறை சார்ந்தவர்கள் முன்னிலையில் இந்த உணர்வுக் கிளர்ச்சியும் ஆத்திர உணர்வும் வெளிப்படுத்தப்பட்டிருந்தமை துரதிஸ்டமானதாகும். இத்தகைய செயற்பாடுகள் குற்றச் செயல்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட முயற்சிப்பவர்களுடைய நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதுடன், எதிர்மாறான உணர்வுகளுக்கு அவர்கள் ஆளாகுவதற்கும் வழி வகுத்துவிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குற்றவாளிகள் சமூகத்தில் இருந்தே செயற்படுகின்றார்கள். அவர்கள் வான்வெளியில் இருந்து வந்து குற்றங்களைச் செய்துவிட்டுத் தப்பிச் செல்பவர்களல்ல. சமூகத்தின் ஓர் அங்கமாக இருப்பவர்களே குற்றச் செயல்களிலும் வன்முறைகளீலும், சமூகவிரோதச் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றார்கள். குற்றம் புரிந்த பின்னர் அவர்கள் சமூகத்துக்குள்ளேயே கரைந்து மறைந்துவிடுகின்றார்கள். அவர்களைக் கண்டுபிடிப்பதும், அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாதவாறு தடுப்பதற்கான வழிமுறைகளைக் கையாள்வதும், முழுயைமாக சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற அதிகாரிகளின், தனித்துவமான பொறுப்பாகாது.

இந்த விடயத்தில் சமூகத்திற்கும் பாரிய அளவில் பொறுப்பு உள்ளது. இத்தகைய சம்பவங்களின்போது உணர்ச்சி வசப்பட்டு, ஆத்திரமேலிட செயற்படுபவர்களும், அந்த பொறுப்பை உணர்ந்து, கண்ணியமாகவும் உறுதியாகவும் செயற்பட வேண்டியது அவசியம்.

இது ஒரு புறமிருக்க, யாழ் குடாநாட்டிலும், வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்திலும், காலத்துக்கு;க காலம் வன்முறைகள் அதிகரிப்பதும், குற்றச்செயல்கள் கட்டுக்கடங்காமல் இடம்பெறுவதும் ஒரு வகையில் சுழற்சி முறையிலேயே இடம்பெற்று வருகின்றன.

வன்முறைகள், சமூகவிரோதச் செயற்பாடுகள் மற்றும் குற்றச்செயல்கள் மறைமுகமான அரசியல் நிகழ்ச்சிநிரல் ஒன்றின் அடிப்படையிலேயே இவ்வாறு சுழற்சி முறையில் இடம்பெற்று வருகின்றன என்ற சந்தேகம் நீண்டகாலமாகவே நிலவுகின்றது. குறிப்பாக தேர்தல்கள் பற்றி பிரஸ்தாபிக்கப்படும்போது, தேர்தல்களுக்கு முகம்கொடுக்கின்ற சந்தர்ப்பங்கள், முக்கியமான அரசியல் மாற்றங்கள் அல்லது அரசியல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள சந்தர்ப்பங்களின்போது. இத்தகைய வன்முறைகளும், குற்றச்செயல்களும் தலையெடுப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சந்தர்ப்பங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பொதுமக்கள் குறிப்பாக சிறுபான்மை இன மக்கள் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்வதைத் தடுப்பதற்கும், நாட்டு நிலைமகளை உன்னிப்பாக அவதானித்து அவற்றின் உண்மைத் தன்மையை உணர்ந்து அதற்கேற்ற வகையில் தமது நலன்களை முதன்மைப்படுத்தி தீர்மானம் மேற்கொள்வதைக் குழப்புவதுமே இந்த வன்முறைகளினதும், குற்றச் செயல்களினதும் நோக்கமாகத் தெரிகின்றது.

மக்கள் மனங்களில் அமைதியின்மையையும் அச்ச உணர்வையும் தமது பாதுகாப்பு குறித்து கவலையுடன் கூடிய கரிசனை நிலைமையையும் உருவாக்கி அதன் ஊடாக அவர்கள் அரசியல் ரீதியாகவும், ஒட்டுமொத்த சமூக நலன்சார்ந்த நிலையிலும் அவர்கள் செயற்படுவதைத் தடுப்பதே இந்த வன்முறைகள் மற்றும் குற்றச் செயல்களின் பின்னணி நோக்கமாகக் காணப்படுகின்றது.

தமது குடும்பங்களினதும், குடும்பப் பெண்களினதும் பாதுகாப்பு சுயகௌரவம் என்பவற்றிற்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலான நிலைமை சமூகத்தில் ஏற்படும்போது அது ஒரு சமூகம் சார்ந்த அச்சமாக, பயப்பீதியாக உருவெடுக்கின்றது. அப்போது, மக்கள் மனம் குழம்பி அச்சத்தில் உறைந்து நடைப்பிணத்துக்கு சமமானவர்களாகவே மாற்றமடைகின்றார்கள். இதன் மூலம் அந்த சமூகமே உளவியல் ரீதியாகப் பலவீனமடைகின்றது. இந்தப் பலவீனம் அரசியல் முதலீடாக நரித்தந்திரம் மிக்க அரசியல்வாதிகளுக்குப் பயன்பட்டிருப்பதையே கடந்த காலங்களில் சுழற்சி முறையில் இடம்பெற்ற கொள்ளைகள், கொலைகள், வன்முறைகள், சமூக விரோதச் செயற்பாடுகள் என்பன வெளிப்படுத்தியிருக்கின்றன.

இந்த சுழற்சி முறையிலான குற்றச்செயல்களின் வரிசையில் நிரந்தரமாக இழையோடும் வகையில் போதைப்பொருள் கடத்தலும், போதைப்பொருள் விநியோகமும், போதைப்பொருள் பாவனையும், அத்தகைய பாவனையின் பின்னர் போதையில் காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இதனைத் தடுப்பதற்கு பல்வேறு தரப்பினரும், பல்வேறு சமூக சக்திகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம். அத்தகைய ஒன்றிணைந்த செயற்பாட்டின் ஊடாகவே சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற நிர்வாக சக்திகளைம் சீராகச் செயற்படத் தூண்ட முடியும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More