குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்திய அரசின் நிதி உதவியுடன்,’1990′ சுபாஸ்அரிய எனும் அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை வடமாகணத்தில் இம்மாதம் 21 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
வடமாகாணத்திற்கு 20 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்படவுள்ளது.அவற்றில் யாழ் மாவட்டத்திற்கு 7 அம்புலன்ஸ் வண்டிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4 அம்புலன்ஸ் வண்டிகளும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 3 மாவட்டங்களுக்கும் தலா 3 அம்புலன்ஸ் வண்டிகள் வீதம் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒதுக்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும்,ஒதுக்கப்பட்ட நிலையங்களில்; நிறுத்தி வைக்கப்படும் எனவும் அவசர அம்புலன்ஸ் வண்டி உதவி தேவைப்படுபவர்கள் ‘1990’ சுபாஸ்அரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவையுடன் தொடர்புகளை ஏற்படுத்தி நோயாளர்களை அருகில் உள்ள மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த செயல் திட்டத்தை அமுல் படுத்துவது தொடர்பான அவசர கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை சுகாதார அமைச்சில் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தலைமையில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுபாஸ்அரிய அவசர அம்புலன்ஸ் வண்டி சேவை நடை முறைப்படுத்தும் நிறுவனத்தினர், வடமாகாணத்தில் உள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள்,வட மாகாணத்தில் உள்ள பொது வைத்தியசாலைகளின் இயக்குனர்கள் ஆகியோருக்கு இடையில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது