சைட்டம் தனியார் கல்வி நிறுவனம் தொடர்பாக எழுந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு, இதுபோன்ற பிரச்சினையில் இந்த நாட்டின் எந்தவொரு அரச தலைவரும் மேற்கொள்ளாத அளவு தலையீட்டையும் அர்ப்பணிப்பையும் தான் செய்தது கல்வியில் நாட்டில் எந்தவொரு பிள்ளைக்கும் அநீதி இடம்பெற இடமளிக்காது இருப்பதற்காகவேயாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சைட்டம் நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் இன்று (06) முற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போதே ஜனாதிபதி ; இதனை தெரிவித்தார்.
பல்வேறு அரசியல் நோக்கங்களை கொண்டவர்கள் இந்த பிரச்சினையின் பின்னால் இருந்து அரசியல் இலாபம் தேடுவதற்கு முயற்சித்தபோதும், அனைத்து பிள்ளைகளினதும் எதிர்காலம் குறித்து உரிய கவனம் செலுத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சைட்டம் தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்காதிருந்திருந்தால் 2015ஆம் ஆண்டே அந்த நிறுவனத்தை மூடிவிட்டு தன்பாட்டில் இருந்திருக்க முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி குற்றச்சாட்டுக்கள், எதிர்ப்புகளுக்கு மத்தியில் சுமார் 03 வருடங்களாக குறித்த அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தி அந்த பிரச்சினைக்கு உரிய தீர்வைப்பெற்றுக்கொடுக்க முயற்சித்தது அப்பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டேயாகும் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் இலவச கல்வியைப் பலப்படுத்தி அரசாங்க பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தேவையான அனைத்து மனித மற்றும் பௌதீக வளங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதைப்போன்று அரச சார்பற்ற கல்வி நிறுவனங்களையும் பலப்படுத்தும் கொள்கையை அரசாங்கம் என்ற வகையில் ஏற்றுக்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி பெயர்ப் பலகையுடன் மட்டுப்பட்டிருக்காது தனியார் கல்வி நிறுவனங்களில் இருக்க வேண்டிய தரம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட சைட்டம் நிறுவனத்தின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி இம்மருத்துவ பீடத்தின் இட வசதி மற்றும் ஏனைய தேவைகளை மேம்படுத்துவது குறித்து முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்யரத்ன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரியார் அட்மிரால் ஜே.ஜே.ரணசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.