அமெரிக்க வெளிவிவகாரங்கள் தொடர்பான செனட் குழுவின் முன்னிலையில் முறைப்பாடு…
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இலங்கைக்குள் நீதியை நிலைநாட்டுவது மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றமானது மிகவும் மந்த கதியில் இருப்பதாக இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஹெலய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெளிவிவகாரங்கள் தொடர்பான செனட் குழுவின் முன்னிலையில் அவர் இதனை கூறியுள்ளார். இந்து மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் விரிவான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் மிகவும் முக்கியமானவை. இந்த நாடுகள் ஹோர்முஸ் மற்றும் மலாக்க நீரிணைகளின் பிரதான கடல் வழிகளில் அமைந்துள்ளன.
கடந்த காலத்தில் இருந்த ஊழல்கள், மோதல்கள், அடக்குமுறைகளை நிராகரித்த இலங்கை மக்களின் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்கம், பொறுப்புக் கூறலுக்காக கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா,டு இலங்கைக்கு உதவியது. அதன் பின்னர், இலங்கை வெகுவாக முன்னேறிச் சென்றுள்ளது. எனினும் நீதியை நிலைநாட்டுவது மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் மந்தநிலை காணப்படுகிறது. மதம் மற்றும் இனங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் நடவடிக்கைகள் முழுமையடையவில்லை. கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்களுக்கு எதிரான மோதல் இதனை சுட்டிக்காட்டியுள்ளது. அமைதி மற்றும் அபிவிருத்தியான எதிர்காலத்தை கட்டியெழுப்ப இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அமெரிக்க தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை வழங்கும் எனவும் அமெரிக்காவின் புதிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.