வன்னி மாவட்டத்தின் பிரதி அமைச்சர் காதர் மஸ்தானை முசலி மக்கள் வரவேற்கும் நிகழ்வு நேற்று (7) சனிக்கிழமை காலை முசலி தேசிய பாடசாலையில் இடம் பெற இருந்த நிலையில் பாடசாலையின் பிரதான நுழைவாயில் பூட்டப்பட்டமையினால் அங்கு சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் முசலி மக்கள் வரவேற்கும் நிகழ்வு முசலி தேசிய பாடசாலையில் ஆதரவாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வை பாடசாலையில் நடாத்தவதற்கான அனுதியை பாடசாலை அதிபர் மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோரிடம், ஏற்பாட்டுக்குழுவினர் எழுத்து மூல அனுமதியை பெற்றிருந்தனர்.
குறித்த பாடசாலையில் வரவேற்பு நிகழ்வு நடத்த அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இறுதி நேரத்தில் குறித்த பாடசாலையில் பிரதான நுழைவாயில் சில சிற்றூழியர்களினால் பூட்டு போட்டு பூட்டப்பட்டது.
இதனால் பாடசாலையிலுன் பிரதி அமைச்சரை அழைத்துச் சென்று நிகழ்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பிரதி அமைச்சரின் ஆதரவாளர்கள் மத்தியில் சற்று கோப நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பிரதி அமைச்சரின் வரவேற்பு நிகழ்வு பூட்டு போட்டு மூடப்பட்டிருந்த முசலி தேசிய பாடசாலைக்கு முன் இடம் பெற்றது.
தொடர்ச்சியாக முசலியில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்று வருவதாகவும்,அமைச்சர் ஒருவரின் தூண்டுதலின் காரணமாகவே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பிரதி அமைச்சர் காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.