புலிகளின் கட்டுப்பாட்டில் குற்ற செயல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. குற்றம் செய்வோர் அச்சத்துடன் இருந்தார்கள். அதனால் குற்றம் இடம்பெறவில்லை....
துள்ளும் மீன்களை விட்டுவிட்டு நெத்தலிகளுக்கு கு தண்டனை வழங்குவது பொருத்தமல்ல என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள கூட்டணியின் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு 2004ம் ஆண்டிலிருந்து விடுதலை புலிகளின் ஏக பிரதிநிதிகள். அவர்களின் இலட்சியத்தை முன்னெடுப்போம் என தெரிவித்து தேர்தல்களில் போட்டியிட்டார்கள். அவ்வாறு போட்டியிட்டு அதன் பின்னர் இடம்பெற்ற கொலைகள், உயிரிழப்பு, சொத்திழப்பு அனைத்திற்கும் காரணமாகவும் இருந்துள்ளார்கள். இந்த நிலையில் அவ்வாறானவர்களை விட்டுவிட்டு ஏன் விஜயகலா மீது மாத்திரம் நடவடிக்கை எடுக்க தென்னிலங்கை மக்கள் கொந்தளிக்கிறார்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்.
குறிப்பாக சம்பந்தனும், சேனாதிராஜாவும் பேசியதை கருத்தில் கொள்ளாமல், சம்பந்தனை எதிர்கட்சி பதவியில் வைத்து அழகு பார்க்கும் நிலையில், விஜயகலாவின் கருத்திற்கு எதிர்ப்பது தொடர்பில் மக்கள் ஆராய வேண்டும்” எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வடக்கின் அட்டூழியங்களை ஒழிக்க விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என விஜயகலா தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், அண்மையில் சுழிப்புரத்தில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தன்னை அடக்கிகொள்ள முடியாத நிலையிலேயே அவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் குற்ற செயல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. குற்றம் செய்வோர் அச்சத்துடன் இருந்தார்கள். அதனால் குற்றம் இடம்பெறவில்லை. இந்நிலையில், தான் வகிக்கும் இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து எதையும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் விஜயகலா உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். அதனால் அவருக்கு அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சுப் பதவிக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்வதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.