யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையென யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் பலாலி இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது யாழ் வன்முறைகளுகளுடன் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வன்முறைகளுகளுடன் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுவதானது முற்றிலும் பொய்யான செய்தி எனத் தெரிவித்த அவர் ஆவாக்குழுவை சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
எங்காவது அவர்கள் தமக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்புள்ளதாக தெரிவித்துள்ளார்களா என கேள்வி எழுப்பிய அவர் எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு இவ்வாறு தெரிவிக்கின்றார்கள் எனவும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இத்தகைய குழுக்களுக்குடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் இராணுவத்துக்கில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ்ப்பாணத்தில் யுத்தம் முடிவற்ற பின்னர் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் யாழ்ப்பாணத்தில் படையினரின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டுவருகின்றது எனவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டில்தான் ஈடுபட்டுவருகின்றோம் எனவும் தர்சன கெட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.