குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பூநகரி முக்கொம்பன் பொதுச் சந்தை திறப்பு விழா இன்று(09) காலை பத்து மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று(09) காலை நிகழ்வு திடீரென இரத்துச் செய்யப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு, ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டிருந்த நிலையில் பூநகரி பிரதேச சபையின் தவிசாளரால் நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டிருந்தது.
பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் அ. ஜயம்பிள்ளை தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினரும் சி. சிறிதரனும், கௌரவ விருந்தினர்களாக மாகாண சபை உறுப்பினர்கள் குருகுலராஜா மற்றும் பசுபதிபிள்ளை அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பூநகரி பிரதேச சபையின்செயலாளரும், பூநகரி காவல் நிலைய பொறுப்பதிகாரியும் அழைக்கப்பட்டு அழைப்பிதழ்களும் அவர்களிடம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே குறித்த திறப்பு விழா நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜயம்பிள்ளை அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது
முக்கொம்பன் சந்தை திறப்பு விழா என்னால் இன்று(09) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே குறித்த சந்தை கடந்த 2012 ஆம் ஆண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரால் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்ட விடயம் தெரிய வந்தமையினால் திறப்பு விழா நிகழ்வை இரத்துச் செய்தோம் எனத் தெரிவித்தார்