உலகப் பெறுமானச் சங்கிலிகளுடன் தொடர்புபடுதல், அனைத்து சமூகப் பிரிவுகளையும் உள்ளடக்குதல், பழைய மற்றும் நவீன சூழல் அமைப்புச் சேவைகளுடன் நெருங்குதல் ஊடாக மக்கள் வாழ்வுக்கான மற்றும் நிலைபேறான நகரங்களை உருவாக்கிக் கொள்வதில் காணப்படும் சவாலுக்கு முகங்கொடுக்க முடியும் என இன்று (09 ஆந் திகதி) சிங்கப்பூரில் ஆரம்பமான 6 ஆவது சர்வதேச நகர மாநாடு, சர்வதேச நீர் வாரம் மற்றும் சுத்தமான சூழல் மாநாடு ஆகிய மூன்று மாநாடுகளினதும் ஆரம்ப அமர்வின் பிரதான உரையை ஆற்றும்போது இலங்கையின் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
இன்று உலகம் பெற்றுக்கொண்டுள்ள தொழிநுட்ப முன்னேற்றம் ஊடாக உருவாகியுள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையத்தள அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட அதிவேகமான தொடர்புகள் மானிடப் பாதுகாப்பு மற்றும் நலனோம்புகையை உயர்ந்த மட்டத்தில் முன்னேற்றுவதற்கும், வினைத்திறன்மிக்க, பாதுகாப்பான மக்கள் வாழ்வுக்கான, நிலைபேறான நகர அபிவிருத்திக்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக கவனஞ் செலுத்துவதற்கான காலம் உருவாகியுள்ளதாகவும் பிரதம அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூரின் சேன்டிம் எக்ஸ்போ மற்றும் மாநாட்டு நிலையத்தில் 135 நாடுகளின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் இந்த மாநாடு ஆரம்பமாகியதுடன், சிங்கப்பூரின் பிரதிப் பிரதமர் மற்றும் பொருளாதார, சமூகக் கொள்கைகள் தொடர்பான ஒருங்கிணைப்பு அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், ஆந்திரா பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மாநாட்டின் தலைவர் பேராசிரியர் டொமீ கோ உள்ளிட்ட பல அதிதிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது