லண்டனில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளார்கள். நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றுப் போட்டி ஒன்றில் நடப்பு சம்பியனான ரோஜர் பெடரர் 6-0, 7-5, 6-4 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் அட்ரியன் முன்னாரினோவை வென்று 16-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இன்னொரு போட்டியில் ஜப்பான் வீரர் நிஷிகோரி 4-6, 7-6 (7-5), 7-6 (12-10), 6-1 என்ற செட் கணக்கில் லாத்வியா வீரர் எர்னெஸ்ட் குல்பிஸ்டை வென்று கால்இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அதேவேளை பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்றுப் போட்டி ஒன்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ரஸ்யாவின் எவ்ஜெனியா ரோடினாவை வென்று கால்இறுதிக்குள் முன்னேறியுள்ளார்.
மற்றொரு போட்டியில் முன்னாள் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கர்பர் 6-3, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச்சை வென்று கால்இறுதிக்குள் முன்னேறியுள்ளார்.