சேலம் 8 வழிச் சாலைக்கான அளவீட்டுப் பணி இன்று ஆரம்பமாகின்றது. இதனையொட்டி நிலம் கையகப்படுத்தப்பட உள்ள 42 கிராமங்களிலும் தலா ஒரு காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சென்னை – சேலம் 8 வழிச் சாலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, உத்திரமேரூர் வட்டங்கள் வழியாகச் செல்கிறது.
ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 10 கிராமங்களிலும், செங்கல்பட்டு வட்டத்தில் 5 கிராமங்களிலும், உத்திரமேரூர் வட்டத்தில் 27 கிராமங்களிலும் என மொத்தம் 42 கிராமங்களில் இருந்து 59.1 கி.மீ. தூரத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏற்கெனவே சில இடங்களில் பாதையை குறிக்கும் வகையில் 110 மீட்டர் அகலத்துக்கு அளந்து கல்போடப்பட்டுள்ள நிலையில் சாலைக்காக நிலங்களைக் கையகப்படுத்த விவசாய நிலங்களிலும், பொதுமக்களுக்குச் சொந்தமாக உள்ள பட்டா இடங்களிலும் அளவீட்டு பணிகள் இன்று ஆரம்பமாகின்றன.
குறித்த 42 கிராமங்களிலும் தலா ஒரு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பிரச்சினைக்குரியவர்களின் விவரங்களையும் திரட்டி வருகின்றனர். மேலும் வெளியூர் நபர்கள் அங்கு வந்து விவசாயிகளிடம் போராட்டத்தை தூண்டுகிறார்களா என்றும் கண்காணித்து வருகின்றனர்.
இந்தச் சாலையினால் சுமார் 80 பேர் வீடுகளை இழக்கின்றனர். இவர்களுக்குப் பட்டா வழங்கி பசுமை வீடுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எனினும் விவசாயக் கிணறுகளுக்கான பாதிப்பு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள 27 கிராமங்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பி உள்ளதனால் அப்பகுதியில் நிலங்களை எடுக்கும்போது அதிக பிரச்சினை ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.