குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணி அபகரிப்பின் மறுவடிவமாகவும், தமிழர் தொன்மைகள் அழிக்கப்படும் நிறுவகமாகவும் தொல்பொருள் திணைக்களம் செயற்படுவதாக வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 126ஆவது அமர்வு இன்றைய தினம் வடமாகாண சபையின் பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் தமிழர் தொன்மை அழிப்புக்களை தடுத்து நிறுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரேரணையை முன் வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில் ,
செம்மலை மக்களுக்கு உப உணவுப்பயிர்ச்செய்கைக்காக ஏற்கனவே நீராவியடி ஏற்றத்தில் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது இப்பகுதிகளில் மக்கள் தமது சிறுபயிர்ச்செய்கைகள் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இங்கு பழமை வாய்ந்த பிள்ளையார் கோவில் இருந்தது. 2009இற்கு பின் இதற்கு எதிரப்பக்கமாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
இது தவிர பிள்ளையாரைச் சூழ சிறியளவிலான விகாரை, புத்தர் சிலை என்பன காணப்பட்டன. தற்போது மிகவும் பெரியளவிலான குருகந்தராஜ மகா விகாரை என்ற விகாரை அமைக்கும் முயற்சி நடைபெறுகிறது. கடந்த 2018.07.03ம் திகதி நில அளவைத்திணைக்களத்துடன் இணைந்து அளவீடு செய்து அபகரிக்கும் பாரியளவிலான எண்ணத்துடனான இவர்களின் முயற்சியை மக்களும் மக்கள் பிரதிநிதிகளுமாக இணைந்து தற்காலிகமாக தடுத்து நிறுத்தினோம்.
போர் முடிவுற்ற காலப்பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் சட்டத்தின் மூலமான இச்செயல்களுக்கு உறுதுணையாக தேசிய மரபுரிமைகள் அமைச்சர் கௌரவ கலாநிதி ஜகத் பாலசூரிய அவர்கள் 1823/73ம் இலக்க
2013.08.16 ம்திகதி வெள்ளிக்கிழமை 188ம் அத்தியாயமான தொல்லியல் கட்டளைச்சட்டம் 16ம் பிரிவின் கீழ் புராதனச் சின்னங்கள் அதிவிசேட வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தியுள்ளார்.
முல்லைத்தீவில் குறிப்பாக
01.முல்லைத்தீவு பிரதான பொதுச்சந்தை (து.P லூயில் மனுவேல் ஒவ் வன்னி, புத்தகத்தில் 1886ல் கட்டப்பட்ட ஒரு நல்ல சந்தைக்கட்டடம் என்று குறிப்பிட்டுள்ளார்)
02.ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரம் ஆலயம்
03.மாந்தைகிழக்கு பூவரங்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பத்திரகாளி அம்மன் கோவில்
04.கரைதுறைப்பற்று பிரதேச குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவில் குமாரபுரம் சிறீ சித்திரவேலாயுதம் முருகன் கோவில் வளாகம்
05.கரைதுறைப்பற்று பிரதேச குமுழமுனை கிராம அலுவலர் பிரிவில் ஆஞ்சநேயர் கோவிலை அண்மித்த இடங்கள்
06.மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கரும்புலியன் கிராமத்தைச் சேர்ந்த பாண்டிபுலியன் குளம் சிவன் கோவில்
07.மாந்தை கிழக்கு பாலிநகர் கிராம அலுவலர் பிரிவிலுள்ள வவுனிக்குளம் சிவபுரம் சிறீமலை கோவில்
08.குமுழமுனை குறிஞ்சிக்குமரன் கோவிலடி உள்ளிட்ட 47 இடங்களையும்,
மன்னாரில்
01.திருக்கேதீஸ்வரக்கோவில் பகுதியில் முன்தூண்கள் உள்ள பகுதி
02.முத்தரிப்புத்துறையின் அரிப்புக்கோட்டைப்பகுதி மற்றும் டொரிக் கட்டடம் உள்ளிட்ட 19 இடங்களையும்,
யாழ்ப்பாணத்தில்
01.உடுவில் பிரதேச செயலக பிரிவில் சுன்னாகம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்த சுன்னாகம் பொதுச்சந்தை
02.மயிலிட்டி தெற்கு கிராம அலுவலர் பிரிவில் மயிலிட்டி போர்த்துக்கேயர் கோவிலடி
03.வேலணை அல்லைப்பிட்டி கிராம அலுவலர் பிரிவில் அல்லிராணி கோட்டைப்பகுதி
04.யாழ் பழைய பூங்காவின் புராதனக்குளம்
உள்ளிட்ட 09 இடங்களையும் வவுனியாவில் 07 இடங்களையும் வடமகாணம் முழுவதிலும் மொத்தமாக 82 இடங்களையும் வர்த்தமானியில் பிரகடனப்படுத்தியுள்ளார்கள்.
புராதனச்சின்னங்கள் தொல்லியல் கட்டளைச்சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டியவை தான் ஆனால் இங்கு அதாவது இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டும் தொல்பொருள் திணைக்களம் தேசிய மரபுரிமைகள் அமைச்சின் மூலமாக
புராதன சின்னங்கள் பாதுகாக்கப்படுதல் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களின் தொன்மைகள் தொன்மைச்சான்றுகள் அழிக்ப்படுகின்றன. ஒரு இனத்தினுடைய பழைமை வாய்ந்த இச்சான்றுகளை அழித்து பௌத்த ஆதிக்கங்களை தமிழர்களின் தொன்று தொட்டு வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் நுழைக்கின்றார்கள் திணிக்கின்றார்கள். இதன் மூலம் ஒரு கட்டமைக்கப்பட்ட இன ஒடுக்கு முறை இன அழிப்பினை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள்
என்பதே உண்மை. இதனை நிரூபிக்கக்கூடிய வகையில்
01.ஒட்டுசுட்டான் ஒதியமலையில் வைரவர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது தற்பேர்து அங்கு சைவசமய நிகழ்வுகள் இராணுவத்தால் மறுக்கப்பட்டு, அந்த மலைப்பகுதியில் பௌத்த பிக்குகள் அடிக்கடி சென்று வருவதை மக்கள்
பார்க்கக்கூடியதாகவுள்ளது.
02.ஏற்கனவே குறிப்பிட்ட நீராவியடி ஏற்றத்தின் பிள்ளையார் கோவிலடி சுற்றி வளைக்கப்பட்டு புத்தர் சிலையுடனான விகாரை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 03ம்திகதி மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் நேரடியாக கண்டோம்.
03.இதே போல் முள்ளியவளை குமாரபுரம் முருகன் கோயில் அருகாமையில் தொல் பொருள் திணைக்கள அறிவிப்புடன் பௌத்த அடையாளங்கள் இடப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.
04.குமுழமுனை குறிஞ்சிக்குமரன் கோயில் வளாகம் இரண்டு தடவை பிக்குகள் பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள்
05. கிழக்கில் தென்னமரவடி கந்தசாமிமலை 1983ம் ஆண்டு இடப்பெயர்வு வரை தமிழர்களால் வணங்கப்பட்டு வந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த பிக்குகள் அடிக்கடி அங்கு வருவதாகவும் தாம் அப்பகுதிக்கு செல்ல
முடியவில்லை எனவும் தென்னமரவடி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இப்படியாக தொல் பொருள் திணைக்களத்தால் தேசிய மரபுரிமைகள் அமைச்சின் தொல்லியல் கட்டளைச்சட்டமானது தமிழர்களின் புராதனச்சின்னங்கள் அழிக்கப்பட்டு தமிழ்ப்பாரம்பரியங்கள் குழிதோண்டிப்புதைப்பதாகவே உள்ளது.
வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் ஃஇடங்கள் என்பதை நிறுவும் சான்றுகளில் வட கிழக்கில் காணப்படும் தொல்லியல் எச்சங்களும் சின்னங்களும் முதன்மையானவை.
அச்சின்னங்கள் இனங்காணப்பட்டு அவற்றில் உள்ள தமிழர் அடையாளங்கள் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் பௌத்த மத சின்னங்களை நிறுவுதல் வடகிழக்குப்பகுதிகளில் தமிழர் தொன்மையை சிதைக்கும் நடவடிக்கையாகும்.
வடகிழக்கு பகுதிகளில் தமிழர்களின் நிலங்களும் அபகரிக்கப்படுகின்றன. சிங்களக்குடியேற்றங்களும் நடைபெறுகின்றன. தொல்லியல் திணைக்களத்தினூடாக தமிழர் பூர்வீக நிலங்களிலுள்ள தொல்லியல் சான்றுகளும் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் பௌத்த மத சின்னங்கள் நிறுவப்படுகின்றன. இதன்மூலம் பௌத்த ஆதிக்கத்திலுள்ளவர்கள்
இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை இல்லாமல் செய்கின்றனர்.
நிறுத்தப்படல் வேண்டும் இலங்கை தமிர்களுக்கு சொந்தமானது அதிலும் வடக்கு கிழக்கு எமது தாயகம் தமிழர்களின் பூர்வீகம். இங்கு ஏற்படுத்தப்படும் திணிப்புக்கள் உடைத்தெறியப்பட வேண்டியவை.
சட்டரீதியாக அணுகி இவ்வாறான தமிழர் அடையாளங்கள் மீதான பௌத்த மத திணிப்பை இல்லாதொழிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொள்கின்றேன். என தெரிவித்தார்.