மகாராஷ்ரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கு மின் அஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர் மோடியை மாவோயிஸ்டுகள் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, இந்தியா முழுவதும், மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் காவற்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுமார் 40 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவர்கள் மோடியை கொலை செய்ய திட்டமிட்டிருந்த சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதை அடுத்து, அதற்கு பழி வாங்கும் விதமாக, மகாராஷ்டிர முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.