குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயமாக திறக்கப்பட்டுள்ள அலுவலகம் சம்பந்தமாக உடன் புரிந்து கொள்ள முடியாவிடினும் அவர்களுக்கு அவகாசம் கொடுத்து பார்ப்பது நலம் என இலங்கைக்கான கனடிய தூதுவர் டான்ட் மிக்கினோ தெரிவித்துள்ளார்.
டான்ட் மிக்கினோ நேற்று நிங்கட்கிழமை மாலை மன்னாருக்கு வருகை தந்த நிலையில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு அலுவலகத்தில் தலைவர் அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் ஆளுநர் சபை பிரதி நிதிகளையும் சந்தித்து உரையாடுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் விடயத்தில் கனேடிய அரசாங்கமானது பெரும் ஆதரவை வழங்கி வருகின்றதனால் வடக்கு கிழக்குப் பகுதிக்குச் சென்று அங்கு வாழ் வாழ் மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் முகமாகவே மன்னாருக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கனேடிய தூதுவராக வந்து ஒன்பது மாதங்கள் தான் எனவும் தற்பொழுது மன்னாருக்கு முதல் தடவையாக வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் ஆக்கபட்டவர்களின் விடயமாக திறக்கப்பட்டுள்ள அலுவலகம் சம்பந்தமாக உரையாடல் இடம்பெற்றது.
பிரஜைகள் குழுவினர் இந்த அலுவலகம் அரசுக்கு சாதகமாகத்தான் செயல்படும் போல் தங்களுக்கு சந்தேகம் ஏற்படுவதாக பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.இதற்கு கனேடிய தூதுவர் பதிலளிக்கையில் ,,
இந்த அலுவலகத்தை முன்னெடுத்துச் செல்பவர் சாலிய பீரீஸ். அவர் மிகவும் நல்லவர். கொஞ்சக் காலத்துக்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கள். இப்பொழுது அவர்களின் செயல்பாட்டை உடன் கணிக்க முடியாது என்றார்.
மேலும் காணாமல் ஆக்கப்பட்வர்கள் குறித்து இந்த அரசு கவனம் செலுத்துவதாக தெரியவில்லையென பிரஜைகள் குழுவினரால் தெரிவிக்கப்பட்டது.அதற்கு தூதுவர் கருத்து தெரிவிக்கையில் ,
காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கியவர்களையும் கொண்ட திட்டங்களை கொண்டே பல நிபுணர்களை உள்வாங்கி செயல்படுகின்றது.இதற்கு கனடா அரசாங்கம் இவர்களுக்கு ஆதரவு வழங்கி வருவதுடன் ஊக்கத்தையும் வழங்குகின்றது. கனடாவைச் சேர்ந்த ஒரு சில தொண்டர் பணியாளர்களும் இவர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர் என்றார்.
கனேடிய அரசால் வழங்கப்படும் உதவிகள் உண்மையில் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு போய் சேர்கின்றதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.