வீட்டுச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலரான லியு சியாபோவின் மனைவியான லியூ ஜியாவினை வெளிநாடு செல்ல சீன அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. லியூ ஜியா செவ்வாய்க்கிழமையன்று சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து ஜெர்மனிக்கு செல்லும் விமானத்தில் சென்றுள்ளதாகவும் அவர் தனது சுய விருப்பத்தின் அடிப்படையில், மருத்துவ சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு சீனாவில் ஜனநாயகம் தொடர்பான சார்ட்டெர் 8 என்ற நூலை வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான 61 வயதான லியு சியாபோ என்பவருக்கு சீன அரசு 11 வருட சிறைத் தண்டனை விதித்தது.
இந்தநிலையில் ஈரல் புற்றுநோயால் லியு சியாபோ பாதிக்கப்பட்டதனையடுத்து சிகிச்சை வழங்கும் நோக்குடன் அவர் விடுவிக்கப்பட்ட போதும் வெளிநாட்டில் இருந்து சிறப்பு நிபுணர்களை வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சீன அரசு நிராகரித்து விட்டநிலையில் அவர் 2017 ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார்.
அவரது மரணத்துக்கு பின்னர் அவரின் மனைவி லியு கிசியா-வை சீன அரசு வீட்டுக் காவலில் வைத்திருப்பதாகவும் அவரது கைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்படுவதாகவும், சந்திக்க விரும்பும் நபர்களை காவல்துறையினர் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தனிமையான இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் மன அழுத்தத்துடன் சேர்த்து உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ள லியு கிசியாவை வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெறும் வகையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் அதிகாரிகள் சீன அரசை வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது