போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு தான் கையொப்பமிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். குறிப்பாக ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டனை பெற்று, சிறையில் இருந்து கொண்டும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற கையொப்பமிடுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
இது சம்பந்தமான தீர்மானம் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் விபரங்களை வழங்குமாறு, நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள மரணதண்டனையை மீண்டும் அமுலுக்கு கொண்டுவருவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை, நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்திருந்தார். இதற்கு அமைச்சரவையின் முழு ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைக்காக 19 மரண தண்டனை கைதிகளின் விபரத்தை ஜனாதிபதி கோரியுள்ளதாக ராஜித தெரிவித்தார்.
சிறைக்குள் இருந்தும் பிணையில் வெளிவந்தும் பாரிய போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் 19 பேரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் இடம்பெறும் பாரிய குற்றச்செயல்களின் பின்னணியில் இவர்களே செயற்படுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் 1976ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இடைநிறுத்தப்பட்டது. எனினும், நாட்டில் நாளாந்தம் குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென பல்வேறு அமைப்பினரும் பாதிக்கப்பட்டவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.