குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி – கனகாம்பிக்கைக்குளம் பாடசாலைக்கு அருகில் உள்ள மைதானத்தில் மாலை நேரங்களில் ஒன்று சேரும் மாணவர்களும் இளைஞர்களும் மதுபோதையில் இருந்து மாலைநேர வகுப்புகளுக்கு சென்று வரும் மாணவிகளையும், பெண்களையும் நோக்கி தகாத வார்த்தை பிரயோகங்களையும், சேட்டைகளிலும் ஈடுப்பட்டு வருகின்றனர். நேற்றைய தினமும்(11) மாணவி ஒருவரை அவர்கள் தாக்கியுள்ளனர் எனத் தெரிவித்து கணகாம்பிக்கைகுளம் பாடசாலை மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளை புறக்கணித்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி – கனகாம்பிக்கைக்குளம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் மாலை நேரக் கல்வியை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொணடிருந்த போது, கனகாம்பிகைக்குளம் பாடசாலைக்கு அருகில் மது போதையில் நின்ற இளைஞர்கள் குழுவினரால் மாணவி மீது தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மாணவியையும் தாக்கியுமுள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பில் மாணவி தனது பெற்றோருக்கு நடந்த விடயத்தை சொன்னபோது மாணவியின் தந்தையார் சம்பவ இடத்திற்குச் சென்று குறித்த இளைஞர்களிடம் கேட்டு விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதன்போது குறித்த இளைஞர் குழுவினர் வீட்டினுள் உட்புகுந்து பொருட்களை சேதமாக்கியதுடன் வீட்டில் இருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.இது தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் உடனேயே விடுவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன், இன்று கனகாம்பிகைக்குளம் பாடசாலை மாணவர்கள் கற்றல் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.இது பற்றி தெரியவருவதாவது,இன்று காலை கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள், தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு தெரிவித்து இன்று பாடசாலைக்கு செல்லாது ஒன்று கூடி கற்றல் செயற்பாடுகளில் இருந்து விலகியிருந்தனர். பாடசாலை மைதானத்தில் மாணவர்களும் பெற்றோரும் ஒன்று கூடியிருந்தனர்.
இந்நிலையில், குறித்த பகுதியில் 18 வயதுக்கு குறைந்த சிலர் இவ்வாறு குறித்த வீதியில் மாலை நேரங்களில் நிற்பதாகவும், அவர்களில் சிலர் போதைப்பொருள் பாவித்தவர்கள் போல் செயற்படுவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை சூழலில் தம்மை பழைய மாணவர்கள் என தெரிவித்துக் கொண்டு போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதுடன், அவ்வீதியால் செல்லும் பிள்ளைகள் மீது இவ்வாறு தகாத முறையில் நடந்து கொள்ள முற்படுவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு கரைச்சி கோட்ட அதிகாரி, அமிர்தலிங்கம் மற்றும் காவல்துறையினர் வருகை தந்து பாடசாலை அலுவலகத்தில் பேச்சு நடத்தினர். தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாதவாறு நடவடிக்கை எடுப்பதாக பொலிஸாரால் உறுதி வழங்கப்பட்டதை மாணவர்கள் தங்களது கல்விச் செயற்பாடுகளுக்கு திரும்பியுள்ளனர்.