குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வந்த பெரு விளையாட்டு மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளில் வடமாகாண ரீதியில் முதல் இடத்தை பெற்ற மன்னார் கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை(13) காலை மன்னாரில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. -மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் தலைமையில் குறித்த வரவேற்பளிக்கப்பட்டது.
இதன் போது வெற்றி வாகை சூடிய மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பாடசாலை அதிபர்கள், மன்னார் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள் பெற்றோர் என பலர் கலந்து கொண்டிருந்தனர். -இதன் போது வெற்றி பெற்ற மாணவர்கள் பாண்ட் வாத்திய இசையுடன் மன்னார் வலயக்கல்வி அலுவலகம் வரை அழைத்துச் செல்லப்பட்டனர்.
–வட மாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களுக்கிடையில் குறித்த போட்டிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்தது. தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த போட்டிகளில் வேறு மாவட்ட மாணவர்கள் தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடிய நிலையில் 11 வருடங்களின் பின் மன்னார் கல்வி வலய மாணவர்கள் வடமாகாண ரீதியில் முதல் இடத்தை பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.