குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமராட்சி பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் கடலட்டை பிடிப்பதற்கு எதிராக அனைத்து தரப்பினரும் போராட முன் வர வேண்டும் என வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் சமாசத்தின் தலைவர் நாகராஜா தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வடமராட்சி கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். அதற்கு எதிராக மீனவர்கள் போராட்டங்களை நடாத்தி வந்தனர். தற்போது அந்த போராட்டம் சிறு பின்னடவை சந்தித்தள்ளது. வெளிமாவட்ட மீனவர்களுக்கு அப்பகுதிகளில் உள்ள ஐந்து சங்கங்கள் அனுமதி வழங்கி உள்ளன. சில தனிநபர்களும் தமது காணிகளை கொடுத்துள்ளனர். அதற்கு குத்தகை பணமாக பெருமளவான பணத்தினை பெற்றுக்கொண்டு உள்ளனர். தற்போது அதனை திடீரென திரும்ப வழங்க முடியாமை உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சில பிரச்சனைகள் உள்ளமையால் , போராட்டங்களை தொடர்ந்து நடத்துவதில் சிறு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இலங்கையிலையே வடக்கு கடலில் தான் மீன் வளம் அதிகமா உள்ளது. அதனால் தான் வடக்குக்கு எல்லோரும் வருகின்றார்கள். அதற்கு காரணம் ஆழ் கடலில் உள்ள மீன்கள் இனப்பெருக்கத்திற்கு முட்டையிடுவதற்கும் , உணவுக்கும் கரை பகுதிகளை அண்டி இரவில் வரும்.
அவ்வேளைகளில் வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடியில் ஈடுபட்டால் அவை கரைக்கு வராது. அத்துடன் கடலுக்கு அடியில் உள்ள பவள பாறைகளையும் அழிப்பதனால் மீன் வளம் குறைந்து கொண்டே செல்கின்றது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் பிடித்த மீனுக்கு தற்போது இருபது கிலோ மீற்றர் செல்ல வேண்டி உள்ளது. அது மட்டுமின்றி எமக்கு தேவையில்லை என கடலில் கொட்டிய மீன்கள் தற்போது கிலோ 50 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகின்றது. அவ்வளவுத்துக்கு மீன் வளம் குறைந்துள்ளது. இந்த நிலை நீடிக்கும் எனில் நாம் கடற்தொழிலை விட்டு பிச்சை எடுக்க செல்ல வேண்டும்.
வெளிமாவட்ட மீனவர்களின் அத்து மீறல்கள் தொடர்பில் மத்திய அமைச்சருடன் நேரில் சந்தித்து கதைப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு தமிழ் அரசியல்வாதிகள் பலரிடம் கேட்ட போதும் யாரும் எமக்கு உதவ முன்வரவில்லை. பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவே எமக்கு உதவ முன் வந்து அமைச்சருடன் கதைப்பதற்கு ஏற்பாடு செய்து தந்தார்.
எமது சில அரசியல் வாதிகள் ஒரு படகில் இருவருக்கு மேல் கடலட்டை பிடிக்க செல்ல கூடாது, இரவில் வெளிச்சம் பாய்ச்சி பிடிக்க கூடாது , கரையில் இருந்து ஐந்து கிலோ மீற்றருக்கு அப்பால் சென்றே பிடிக்க வேண்டும் என்பது இலங்கையில் உள்ள சட்டம். அதனை வடமராட்சி கடலில் கடலட்டை பிடிக்கும் வெளிமாவட்ட மீனவர்கள் பின் பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.
எமது கடல் வளத்தை பாதுகாக்கும் எந்த எண்ணமும் இல்லாமல் அவர்கள் அவ்வாறு செயற்பட்டு உள்ளார்கள். எனவே எமது கடல் வளத்தை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து போராட முன் வர வேண்டும் என கோருகின்றோம். என தெரிவித்தார்.