இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்..
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26 ஆம் திகதி அனைத்து அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிர்வாக அதிகாரிகளும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது இரு வாரங்களுக்குள் தீர்வு வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இரு வாரங்களாகியும் தீர்வு கிட்டாமையினால் அடுத்த கட்டப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகிய தேசிய பரீட்சைகளையும் புறக்கணிக்க நேரிடும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் குறிப்பிடுகையில்,
கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் நியமனம், அதிபர் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட கல்வித் துறைசார் அதிகாரிகள் நியமனத்தில் தற்போது அரசியல் பழிவாங்கலே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கல்வித் துறையில் அரசியல் கைக்கூலிகளின் தலையீட்டை நாம் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை.
சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர்களுக்கே தற்போது நியமனம் வழங்கப்படுகின்றது. இவர்களில் 27 பேர் சாதாரண தரத்தில் கணித பாடத்தில் சித்தியடையாதவர்களாக காணப்படுகின்றனர்.
இவ்வாறானவர்களின் கல்வி நிலைகள் தொடர்பில் ஆராயுமாறும் கல்வி பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் நாம் கோரியிருந்தோம். எனினும் அவர்கள் அதையும் மேற்கொள்ளவில்லை. அடுத்ததாக மேலும் 1014 பேருக்கு கல்வி நிர்வாக சேவையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு நியமனம் பெற இருப்பவர்கள் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடையாதவர்களாகவும், சிலர் பரீட்சைக்கே சமூகமளிக்காதவர்களாகவும் உள்ளனர். இவ்வாறான நியமனங்கள் மூலம் எமது நாட்டின் எதிர்கால சந்ததியினரே பாதிக்கப்படுவர் என்பது கவலைக்குரிய விடயமாகும். அனைத்து கல்வித் துறைசார் தொழிற்சங்கங்களுடனுடம் இது குறித்து கலந்துரையாடிய பின்னரே போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
நாடு முழுவதிலுமுள்ள அனைத்து கல்வி துறை அதிகாரிகளும் இணைந்து கொழும்பு புகையிரத நிலையத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை பாரிய ஆர்ப்பாட்ட பேரணியாக செல்ல தீர்மானித்துள்ளோம். இப்போராட்டத்திலும் தீர்வு எட்டப்படவில்லை என்றால் தேசிய பரீட்சைகளையும் புறக்கணிக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.