முறிகண்டி – அக்கராயன் வீதியில் திருடர்களை மடக்கிப் பிடித்த போதும் நடவடிக்கை எடுக்காத காவற்துறை….
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கிளிநொச்சி முறிகண்டி – அக்கராயன் வீதியில் இன்று மாலை பெண் ஒருவருடைய தாலி கொடியை அறுக்க முயன்றவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் கொள்ளையர்களை காவற்துறை நிலையத்தில் ஒப்படைத்தபோதும் காவற்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
முறிகண்டி அக்கராயன் வீதியில் தொடர்ச்சியாக பெண்களின் நகைகள் அறுத்து செல்லப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இம்மாதமும் இரு பெண்களிடம் நகைகள் அறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவற்துறையில் முறைப்பாடு கொடுத்தபோதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அக்கராயன் பகுதியை சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் இந்த வீதியால் பயணித்துள்ளார்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குடும்பஸ்தருடைய மனைவியின் தாலி கொடியை அறுக்க முயன்றுள்ளனர். அதன் போது அந்த பெண் கூச்சலிட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த பகுதியில் உள்ளவர்களும், குறித்த குடும்பஸ்த்தரும் இணைந்து திருடர்களை துரத்தியபோது ஒருவர் பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டதன் பின் அக்கராயன் காவற்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர் மற்றய திருடரையும் மடக்கி பிடிக்கப் பட்டதை தொடர்ந்து அவரும் காவற்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மு றைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த அக்கராயன் காவற்துறையினர், கிளிநொச்சி காவற்துறை நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்யுமாறு கூறியுள்ளனர். பின்னர் பொதுமக்கள் திரண்டு பொலிஸாருடன் தர்க்கப்பட்ட நிலையில் திருடர்களை மடக்கி பிடித்த மக்கள் மீது வழக்கு பதிவு செய்யபோவதாக பொலிஸார் அச்சுறுத்தி முறைப்பாட்டை ஏற்காது மக்களை விரட்டியுள்ளனர். அது குறித்து பொறுப்பு வாய்த்த அதிகாரிகள் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரியுள்ளனர்.
1 comment
ஸ்ரீலங்கா அரசாங்கம் உளவுத்துறை மூலம் திருடர்களையும், ஆவாக்களையும் உருவாக்கி குற்றங்களை செய்விக்கின்றது என்று நினைக்கின்றேன்.